என்ன கொடுமை இது..! – மகனின் உடலை பைக்கில் எடுத்து சென்ற தந்தை!

ஆந்திர மாநிலத்தில், இறந்த மகனின் உடலை எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிக கட்டணம் கேட்டதால், இருசக்கர வாகனத்தில், மகனின் உடலை தந்தை எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள, அன்னமையா மாவட்டத்தில் உள்ள
சிட்வேல்
என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜெசேவா என்ற சிறுவன், சீறுநீரகக் கோளாறு காரணமாக, திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர். ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை, அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து, மகனின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல, அவரது தந்தை முடிவு செய்தார். இவரது சொந்த கிராமம், மருத்துவமனையில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிக கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் அவர் செய்வதறியாது திகைத்து போய் நின்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிட்வேல் கிராமத்தைச் சேர்ந்த, ஸ்ரீகாந்த் யாதவ் என்பவர், உயிரிழந்த சிறுவன் உடலை மற்றொரு ஆம்புலன்சில் இலவசமாக எடுத்து வர ஏற்பாடு செய்தார். ஆனால் சிண்டிகேட் பிரச்னை காரணமாக, அந்த ஆம்புலன்சை மருத்துவமனைக்குள் நுழைய தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அனுமதி மறுத்தனர்.

“மருத்துவமனையில் இருந்து உடல் வெளியேற வேண்டும் என்றால், அது தங்களுடைய ஆம்புலன்ஸ் மூலம் தான் செல்ல வேண்டும்” என்றும் அவர்கள் கறார் காட்டி உள்ளனர். இதனால் கடும் வேதனை அடைந்த சிறுவனின் தந்தை, தனது உறவினரின் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, மகனின் உடலை தோளில் சுமந்தபடி சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த திருப்பதி எம்பி மட்டிலா குருமூர்த்தி, இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக, 6 தனியார் ஆம்புலன்ஸ் ஆப்பரேட்டர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.