கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரதமர் மோடி நாளை முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை

புதுடெல்லி:

இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிகிறது.

குறிப்பாக டெல்லி, அரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றின் 4-வது அலை பரவத் தொடங்கி விட்டதாகவும் கருதப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15,636 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பல மாநிலங்களில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தென் மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். மேற்குவங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை (27-ந்தேதி) பகல் 12 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் பிரதமர் அலுவலக, உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக விளக்கம் அளிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.