'முன்பை காட்டிலும் ட்விட்டரை சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன்' – எலான் மஸ்க்

டெக்சாஸ்: சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தை முன்பை காட்டிலும் சிறந்ததாக மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார் அதனை வாங்கவுள்ள எலான் மஸ்க்.

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. அந்த அறிவிப்பு முறைப்படி வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார் மஸ்க்.

சாமானியர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் களமாடும் தளம் தான் ட்விட்டர். எதை ஒன்றையுமே 280 கேரக்டர்களில் ட்வீட் மூலம் சுருங்க சொல்லி விளங்க வைக்க உதவுகிறது ட்விட்டர் தளம். அதில் மிகவும் ஆக்டிவாக இயங்குபவர் மஸ்க். முன்னதாக, ட்விட்டர் தளத்தில் பேச்சு சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். அது தொடர்பாக கருத்துக் கணிப்பு (Poll) ஒன்றையும் அவர் நடத்தியிருந்தார். தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக தெரிவித்தார் மஸ்க். அதோடு எடிட் பட்டன் குறித்தும் பேசியிருந்தார். இத்தகைய சூழலில் தான் தற்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.

“பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயக செயல்பாட்டின் அடித்தளமாகும். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத பல விஷயங்கள் விவாதிக்கப்படும் தளமாக ட்விட்டர் உள்ளது. அதனால் முன்பை காட்டிலும் ட்விட்டரை சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன். புதிய அம்சங்கள் கொண்டுவரப்படும். அதன் மூலம் ட்விட்டர் மேம்படுத்தப்படும். ட்விட்டருக்கு என மிகப்பெரிய சக்தி உள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்” என தெரிவித்துள்ளார் மஸ்க்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.