எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டரை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் 2 மடங்காக அதிகரிப்பார்கள்…!

புதுடெல்லி
உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். இந்த தளத்தை  ரூ.3.36 லட்சம் கோடி கொடுத்து வாங்கியுள்ளார் உலகின் முன்னணி  பணக்காரர் எலான் மஸ்க். 
அந்த செய்தி உறுதியானது முதல் டுவிட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்கக்கூடும் என தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர் மனித உரிமை ஆர்வலர்கள். ஏனெனில் ‘பேச்சு சுதந்திரத்தை விரும்புபவன் நான்’ என வெளிப்படையாகவே மஸ்க் சொன்னது தான் இதற்கு காரணம்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஜனநாயகத்திற்கு அடிப்படையே பேச்சு சுதந்திரம் தான் என சொல்லியிருந்தார் மஸ்க். அத்துடன் டுவிட்டர் தளத்தில் பேச்சு சுதந்திரம் குறித்து கேள்வியும் எழுப்பியிருந்தார். தொடர்ந்து டுவிட்டரில் சுமார் 9 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்தார். பின்னர் அந்த தளத்தின் எடிட் பட்டன் அம்சம் குறித்தும் பேசினார். இந்தச் சூழலில் தற்போது டுவிட்டரை தன்வசப்படுத்தி உள்ளார் மஸ்க்.
“பேச்சு சுதந்திரம் என்பது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் பொருந்தும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். சட்டத்தை மீறும் சென்சார்ஷிப்புக்கு நான் எதிரானவன். பேச்சு சுதந்திரத்தை குறைக்க வேண்டும் என விரும்பும் மக்கள் அதற்கான சட்டத்தை இயற்றச் சொல்லி அரசினை அணுகலாம். சட்டத்தை மீறுவது மக்களின் விருப்பத்துக்கு நேர் எதிரானது” என டுவீட் மூலம் தெரிவித்துள்ளார் மஸ்க்.
இன்வாக்ட் மெட்டாவர்சிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் டுவிட்டர் முன்னாள்  இந்தியா தலைவரான மணீஷ் மகேஸ்வரி கூறும் போது டுவிட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க் தலைமியில்  இந்தியாவில் டுவிட்டரின் பயனர்களின் வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா தொடர்ந்து ஒரு முக்கியமான சந்தையாக இருக்கும் . டுவிட்டர் பயனாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என கூறினார். 
டுவிட்டர் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. டிவிட்டரின் மிகப்பெரிய பயனர் தளம் அமெரிக்கா ஆகும், 7.69 கோடி பயனர்கள்  உள்ளனர் அதனை தொடர்ந்து ஜப்பானில்  5.89 கோடியாக உள்ளனர், மேலும் இந்தியாவில் 2.36 கோடி  பயனர்கள் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.