துணைவேந்தர் நியமன மசோதா; அன்று கருணாநிதி கூறியது என்ன? பா.ஜ.க கேள்வி

மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவைக் கொண்டுவந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் நியமனத்தில் அதிமுகவினர் ஜெயலலிதா கூறியதைக்கூட கேட்காமல் செயல்படுகிறார்கள் என்று தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் அன்று கலைஞர் கருணாநிதி என்ன கூறினார் தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலதாமதம் செய்வதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. தமிழ்புத்தாண்டை யொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.

இதனிடையே, டாக்டர் எம்.ஜி.ஆர் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள டாக்டர் சுதா சேஷய்யனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, துணை வேந்தர் தேடுதல் குழு 3 பெயர்களை தேர்வு செய்து அளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஆளுநர் துணை வேந்தர் தேடுதல் குழு அனுபிய பெயர்களைத் தவிர்த்துவிட்டு, சுதா சேஷய்யனின் துணை வேந்தர் பதவிக்காலத்தை இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால், துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் மோதல் போக்கு தொடங்கியது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறை ஏப்ரல் 25ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்களும் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது இந்த மசோதாவைக் கொண்டுவந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் நியமனத்தில் அதிமுகவினர் ஜெயலலிதா கூறியதைக்கூட கேட்காமல் செயல்படுகிறார்கள் என்று கூறினார். பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜகவினர், துணை வேந்தர் நியமன மசோத குறித்து அன்று கலைஞர் கருணாநிதி என்ன கூறினார் தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் திருப்பதி நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாவை நிறைவேற்றிய நாளில், அமைச்சர் பொன்முடி, வேந்தராக முதல்வர் இருந்தால் என்ன தவறு? ஜெயலலிதா சொன்னதைக் கூட கேட்காமல், அதிமுகவினர் செயல்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

1994ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு, ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர் தான் அந்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினர். மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், அந்தக்காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில், தி மு கழகத்தின் சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது” என்று திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநநிதி குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம் : நெஞ்சுக்கு நீதி, நான்காம் பாகம், பக்கம் 512)

மேலும், 30, ஜூலை 1996ம் ஆண்டு அன்று தமிழக சட்டசபையில், அன்றைய கல்வித் துறை அமைச்சரும், திமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் அதிமுக கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றதோடு, ஆளுநரே இனி வேந்தராக தொடருவார் என்றும், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா சொன்னதை கேட்காமல் செயல்படுவது சரியா என்று கேட்கும் அமைச்சர் பொன்முடி திமுக தலைவர் கருணாநிதி ‘தேவையற்ற சட்டம்’ என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வந்துள்ளது நியாயமா? நீதியா? என்பதை விளக்க வேண்டும். மேலும், மாநிலத்தில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் வேந்தர் இருக்க மாட்டாரே, அப்போது யார் வேந்தராக இருப்பார்கள்? மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்களே? என்று, இன்று கருணாநிதி அவர்கள் இருந்திருந்தால் கேட்டிருப்பார் அல்லவா என்ற சிந்தனையில்லாமல் அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது சரியா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேபோல்,முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்ற அன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசின் முடிவிற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வருவது நியாயமா? நீதியா? இது தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியை பின்பற்றும் ஆட்சியா என்று மக்கள் கேட்பார்கள் என்பதை மு.க. ஸ்டாலின் உணர வேண்டும்.

நிறைவேற்றப்பட்ட மசோதாவை, மறைந்த முதல்வர் மு கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப நம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திரும்ப பெறுவார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.