பஞ்சன் லாமா சீன குடிமகனாக சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் – சீனா

பீஜிங், 
திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இருக்கும் புத்த மத தலைவர் பஞ்சன் லாமா என அழைக்கப்படுகிறார்.
திபெத்தின் தற்போதைய தலாய் லாமா, கடந்த 1995-ம் ஆண்டு கெதுன் சோக்கி நைமா என்ற, 6 வயது சிறுவனை, 11-வது பஞ்சன் லாமாவாக தேர்வு செய்து, அறிவித்தார்.

பஞ்சன் லாமாவாக அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் சிறுவன் நைமா மாயமானான். அதன் பின்னர் அவன் பொதுவெளியில் வரவே இல்லை. சிறுவனையும், அவனது குடும்பத்தையும் சீன அரசே கடத்தியதாக இன்றளவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் சீனா இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில் 6 வயதில் மாயமான நைமாவின் 33-வது பிறந்த நாளையொட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சீன அதிகாரிகளால் 6 வயதில் கடத்தப்பட்ட பஞ்சன் லாமாவை திபெத்திய சமூகம் அணுகுவதற்கு சீனா தொடர்ந்து மறுக்கிறது. நைமாவின் இருப்பிடம் மற்றும் நல்வாழ்வை பொதுவெளியில் உறுதி செய்யுமாறு சீன அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது.
இதனை கண்டித்து சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “திபெத் தொடர்பான பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொண்டு, மதச்சுதந்திரத்தை மறைப்பாகப் பயன்படுத்துவதையும், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். நைமா ஒரு சீன குடிமகனாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரும், அவரது குடும்பத்தினரும் தாங்கள் தொந்தரவு செய்யப்படுவதை விரும்பவில்லை. எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக இழிவான அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.