"பகவத் கீதையை பைபிளுடன் ஒப்பிடாதீர்கள்" – கர்நாடகா அமைச்சர் சர்ச்சை பேச்சு

“பகவத் கீதை எல்லாவற்றுக்கும் மேலானது; தயவுசெய்து அந்த புனித நூலை பைபிளுடன் ஒப்பிடாதீர்கள்” என்று கர்நாடகா கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இயங்கி வரும் கிளாரன்ஸ் பள்ளியின் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் அண்மையில் பெரும் பேசுபொருளாக மாறியது. அதில், மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு பைபிள் கொண்டு வர வேண்டும் என்றும், மறைக்கல்வி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
image
இந்த விவகாரத்தை கையிலெடுத்த இந்து அமைப்புகள், அந்தப் பள்ளிக்கு எதிராக குரல் கொடுத்தன. “கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களை பைபிள் கொண்டு வருமாறு பள்ளி நிர்வாகம் வலியுறுத்துவதை ஏற்க முடியாது” என அவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த விமர்சனங்கள் குறித்து கவலைப்படாத கிளாரன்ஸ் பள்ளி நிர்வாகம், “பைபிளை அடிப்படையாக கொண்ட கல்வியை தான் நாங்கள் போதித்து வருகிறோம்” எனக் கூறியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு கர்நாடகா அரசு சார்பில் கிளாரன்ஸ் பள்ளிக்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
image
இந்நிலையில், கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷிடம் செய்தியாளர் ஒருவர், “பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை சேர்க்க அரசு பரீசீலித்து வரும்போது, பைபிளை பள்ளிக்கு கொண்டு வரக் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நாகேஷ், “மதம் சார்ந்த நூல்கள் தான் பள்ளிப் பாடத்தில் இருக்கக் கூடாது. பகவத் கீதை மதம் சார்ந்தது கிடையாது.
image
மதம் சார்ந்த சடங்குகள் குறித்தோ, எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது குறித்தோ பகவத் கீதை பேசுவதில்லை. உயர்ந்த நல்லொழுக்கங்களையும், மாண்புகளையுமே அது போதிக்கிறது. அது எல்லாவற்றுக்கும் மேலானது. எனவே தயவுசெய்து பகவத் கீதையுடன் பைபிளை ஒப்பிடாதீர்கள்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.