பாலியல் புகார் எதிரொலி- திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து மலையாள நடிகர் விலகல்

கொச்சி: 
மலையாள திரைப்பட உலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக உள்ள, விஜய்பாபு மீது சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை குற்றம் சாட்டினார். 
இது தொடர்பாக கொச்சி காவல் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். 
இந்த நிலையில் விஜய்பாபு மீது மற்றொரு பெண் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அந்தப் பெண், விஜய்பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தில் முன்பு பணியாற்றியவர். அதன் பேரில் எர்ணாகுளம் போலீசாரும் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதால் விஜய்பாபு மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. 
இந்நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா)வின் செயற்குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 
தன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தான் செயற்குழு உறுப்பினராக உள்ள அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், தான் குற்றமற்றவர் என்று தெரியவரும் வரை, செயற்குழுவில் இருந்து விலகி இருப்பேன் என்றும் விஜய் பாபு குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதம் அம்மா அமைப்பில் விவாதிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எடவேல பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது பேஸ்புக் பதிவில் நடிகர் விஜய்பாபு பாலியல் புகார்களை மறுத்துள்ளார். நான் எந்த தவறும் செய்யாததால் பயப்படவில்லை. நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த பெண்ணை 2018 முதல் எனக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.