சென்னை:
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் பயின்று வந்த கவிப்பிரியா என்ற மாணவி ராக்கிங் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவியின் தற்கொலைக்கு காரணமானோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி, உண்மைகளை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.
இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையான விசாரணை நடத்தி, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன்மூலம் தான் இனி வரும் காலங்களில் தமிழக கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், கவிப்பிரியாவின் தற்கொலைக்கு ராக்கிங் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் புகார் அளித்தும் கூட, அதன் மீது செங்கல்பட்டு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. மாறாக, கவிப்பிரியாவின் உடலை அவசர, அவசரமாக உடற்கூராய்வு செய்ததுடன், உடலை வாங்கிச் சென்று எரிக்கும்படி கவிப்பிரியா குடும்பத்தினரை காவல்துறையினர் மிரட்டுகின்றனர். யாரைக் காப்பாற்ற செங்கல்பட்டு காவல்துறை இப்படியெல்லாம் நடந்து கொள்கிறது? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ராக்கிங் கொடுமையால் கவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து முறையான விசாரணை நடத்த மறுக்கும் காவல்துறை, அவரது உடலை தகனம் செய்ய வைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ராகிங் தடுப்புக் குழு முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவும் முதல்-அமைச்சர் ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.