திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானுக்கு தினசரி வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் என ஆர்ஜித சேவைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சேவைகளில் திரளான பக்தர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறையையொட்டி மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
இதனால் தற்காலிகமாக வாராந்திர சேவைகளை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே விசேஷ பூஜை, சகஸ்கர கலசாபிஷேகம், வசந்த உற்சவம், ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை மற்றும் நிஜபாத தரிசன ஆர்ஜித சேவைகளும் விரைவில் தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பக்தர்கள் மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே சேவை டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள், வி.ஐ.பி பிரேக் தரிசனம் ஏற்பாடு செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 76,324 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,710 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.73 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.