புது டெல்லி:
தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மண்டலம் பகுதியை சேர்ந்த 28 பேர் சந்தையில் பொருட்கள் வாங்கிவிட்டு மினி லாரியில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது பிட்லம் பகுதியிலிருந்து நிஜாம் சாகருக்கு நவதானியங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்துகொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக இந்த இரு வாகனங்களுக்கும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.
இதில் மினி லாரியின் முன்பகுதி நொறுங்கியது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அவர்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம், படுகாயம் அடைந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
