பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்- ப.சிதம்பரம்

பொருளாதாரத்தில் முற்றிலும் தோல்வி…
ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை விவாதிக்கும் குழுவின் தலைவரான முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைப்படத்தக்க அளவில் இருப்பதாக குறிப்பிட்டார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது:-
பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி கண்டுள்ளது. நிலைமையை எவ்வாறு சரிசெய்வது என்று தெரியாமல் நிற்கிறது. விலைவாசி உயர்வையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் அரசு தூண்டுகிறது. மாநிலங்களின் நிதி நிலைமை பலவீனமாக இருக்கிறது. இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார பிரச்சினையில் வெளிப்புற சூழ்நிலையும் சேர்ந்து கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசு நிற்கிறது.
விலைவாசி உயர்வுக்கு உக்ரைன் போரை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. எண்ணெய் விலை உயர்வை விலைவாசி அதிகளவில் உயர்ந்திருப்பதற்கு காரணமாக கூற முடியாது. ஏனென்றால் போருக்கு முன்பே இதே சூழல் நிலவியது. உக்ரைன் போர், நமக்கு பிரச்சினைகளை சேர்த்திருக்கிறது. ஆனால், நாம் முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.
சாக்கு போக்கு காரணம் கூடாது…
மொத்த விலை பணவீக்கமும், சில்லரை விலை பணவீக்கமும் கூடியதற்கு உக்ரைன் போர் போன்ற சாக்குபோக்கு காரணத்தைக் கூறி கொண்டிருக்கக்கூடாது என்று கருதுகிறேன்.
இந்தியா ஒளிரும் என்று கூறியதன் மற்றொரு நிகழ்வுதான், மோடி அரசு தற்போது செய்து கொண்டிருப்பது ஆகும். மோடி அரசின் மிகைப்படுத்தலை முறியடிக்கிற பொருளாதார திட்ட வரைபடத்தை நாங்கள் முன்வைக்க முடியும் என்று நம்புகிறோம்.
1991-ம் ஆண்டு தாராளமயமாக்கலின் புதிய சகாப்தத்துக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு வழிவகுத்தது. செல்வம், புதிய தொழில்கள், புதிய தொழில் அதிபர்கள், பெரிய அளவிலான நடுத்தர வர்க்கம், பல லட்சம் வேலைகள், ஏற்றுமதிகள், 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து வெளியேற்றம் என நாடு மகத்தான பலன்களை அடைந்தது.
பொருளாதார கொள்கைகளில் மாற்றம்
30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உலகமும், இந்தியாவும் மாறி உள்ள நிலையில், அதற்கு ஏற்ற வகையில் பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.
அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள், அடிமட்டத்தில் உள்ள 10 சதவீத மக்களிடையே அளவு கடந்த வறுமை, உலகளாவிய பட்டினி குறியீட்டின் இந்தியாவின் தரவரிசை (116 நாடுகளில் 101-வது நிலையில் இந்தியா). பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு பொருளாதார கொள்கைகளில் செய்யும் மறுசீரமைப்பு தீர்வு காண வேண்டும்.
பொருளாதார கொள்கைகளின் மறுசீரமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி விளைவுகளை பாதிக்கும் என்பது எங்களது நம்பிக்கை ஆகும்.
ஜி.எஸ்.டி. விவகாரம்
மோசமாக தயாரிக்கப்பட்டு, நியாயமற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) விளைவுகளை நாம் அனைவரும் அறிவோம். மத்திய, மாநிலங்களின் நிதி உறவுகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் மாநிலங்களின் நிதி நிலைமை பலவீனமாக உள்ளது. அதை சரிசெய்ய அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே நம்பிக்கை இல்லாத நிலை இருக்கிறது. ஜி.எஸ்.டி. இழப்பீட்டு காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மாநில அரசுகளிடமிருந்து ஒருமனதாக வந்துள்ளது.
தற்போதைய அரசின் அடையாளம்
தானியங்கி, ரோபோ, எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி, 21-ம் நூற்றாண்டில் தொழில், வர்த்தகம் ஆகியவற்றை நடத்தும் வழிகளுக்கு ஏற்ப இந்திய பொருளாதாரமும், இந்திய உழைக்கும் வர்க்கத்தினரும் தயாராக வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சிவிகிதம், தற்போதைய அரசின் அடையாளம் ஆகும். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்பு அலட்சியமாகவும், நிறுத்தமாகவும் உள்ளது.
பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர உதவுகிற கொள்கை நடவடிக்கைகளின் திட்ட வரைபடத்துடன் காங்கிரஸ் வருமா என்று கேட்கிறீர்கள். இந்த அரசு யாருடைய பேச்சுக்கும் செவி சாய்ப்பதில்லை.
நாட்டின் நலன்களுக்கு ஏற்ற கொள்கைகளை நாங்கள் உருவாக்குவோம். அதை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.