ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெங்கையா நாயுடு இன்று கோவை வருகை

கோவை:

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

இதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, மாலை 4.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.

அங்கிருந்து, கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர், இன்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

நாளை காலை 8 மணியளவில் கோவையில் இருந்து துணை ஜனாதிபதி ஊட்டிக்கு புறப்படுகிறார். நேராக குன்னூர் வெலிங்டன் செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.

தொடர்ந்து ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

பின்னர் அவர் ஊட்டி ராஜ்பவனுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். வருகிற 20ந் தேதி வரை துணை ஜனாதிபதி ஊட்டியிலேயே தங்கி இருக்கிறார்.

துணை ஜனாபதி வருகையை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து அவர் ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறாரா? அல்லது சாலை மார்க்கமாக பயணம் செய்கிறாரா? என்பது நாளை காலையே தெரியவரும். காலையில் நிலவும் கால நிலையை பொறுத்து அவரது பயணத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். ஊட்டி தீட்டுக்கல் தளத்தில் இருந்து, படகு இல்ல சந்திப்பு, கலெக்டர் அலுவலக பிரதான சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.

வாகனங்கள் சென்ற வழி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

துணை ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால், அதனையொட்டி நேற்று ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடந்தது.

துணை ஜனாதிபதி கோவை வருகையை முன்னிட்டு இன்று மாலை அவினாசி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று மாலை கோவைக்கு வருகிறார். மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை அவினாசி சாலை மற்றும் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் விமான, பஸ் நிலையம் செல்பவர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அல்லது மாற்று வழியில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த 2 நாட்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு துணை ஜனாதிப வெங்கையா நாயுடு, கவர்னர் ஆர்.என்.ரவி முதல்/அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகின்றனர். இதனையொட்டி சிறப்பு பணிகளில் ஈடுபடும் வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், நில அளவைத்துறையினர் என 70 அரசு ஊழியர்களுக்கு நேற்று கோத்தகிரி தாசில்தார் அலுலவகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்… நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.