“அதிமுகவை காப்பாற்ற நேரம் வந்தாச்சு; மீண்டும் அதே மிடுக்குடன் கட்சி தலைநிமிரும்”- சசிகலா

“அதிமுகவை காப்பாற்ற உகந்தநேரம் வந்துவிட்டது. மீண்டும் அதே மிடுக்குடன் கட்சி தலைநிமிரும்” என தஞ்சாவூரில் திருமண விழாவில் சசிகலா பேசியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பேசிய சசிகலா, “ இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த அதிமுக தொண்டர்களுக்கும், அதிமுக ஒன்றுபட வேண்டும் வென்று காட்டிட வேண்டும் என ஏங்கித் தவிக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவான இயக்கம்.
image
எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இயக்கம் எத்தனையோ சோதனைகளை கடந்த வந்துள்ளது. புரட்சித் தலைவர் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதே சோதனை காலம் தான் தற்போது புரட்சித்தலைவி அம்மா மறைவிற்கு பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது.
அன்றைக்கு எவ்வாறு கழகம் மீண்டும் எழுந்து வந்ததோ, அதேபோன்று தற்போதும் புதுப்பொலிவு பெற்று உன்னத நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை. கழக தொண்டர்கள் கை காட்டும் வரை நிர்வாகிகள் நிலைக்கலாம். ஆனால் அந்த கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான், கழகம் நிமிரும் என்பதை எந்நாளும் மறக்காதீர்கள். இந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓய மாட்டேன். அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தைக் காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது.
image
அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, தன்னிகர் இல்லா பேரியக்கமாக உருவாக்குகின்ற உயர்ந்த பணியில் ஈடுபட்டு வரும் இந்த வேளையில் நீங்களும் பொறுமையை கடைபிடியுங்கள். கண்டிப்பாக புகழ் உங்களை வந்தடையும். குரங்கு ஒன்று மாங்கொட்டையை உடைத்து வைத்து, மரம் உருவாகுமென நினைத்த கதையொன்று உள்ளது. மாம்பழம் சாப்பிடலாம் என ஆசைப்பட்டு தினந்தோறும் மாங்கொட்டையை எடுத்துப் பார்த்து வந்த அந்த குரங்கின் ஆசைப்படி விதையிலிருந்து நேரடியாக மாமரம் வளரவில்லை.
இதையும் படிங்க… தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு?
குரங்கின் ஆசை நியாயம் என்றாலும் அதன் அவசரப் புத்தி நியாயமானதல்ல. ஏனெனில் காலம் என்ற நியதி இல்லாமல் எந்த செயலும் நிறைவேறுவதில்லை. எதற்கும் விதை ஊன்றி, நீருற்றி சிலகாலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நம் செயல் வெற்றி பெற வேண்டும் என்றால், பொறுமையுடன் கூடிய முயற்சி வேண்டும்” என்றுகூறி என அதிமுகவை மீட்டு எடுப்பதாக சூசகமாக பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.