அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லை; மதுவிலக்கு தோல்வி: முதல்-மந்திரியிடம் தைரியமாக புகாரளித்த 6ம் வகுப்பு மாணவன்!

பாட்னா,
பீகாரில் நிதீஷ் குமார் அரசு மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கும் நிலையில், அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கள்ளச்சாராயம் அருந்தி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அரசுப் பள்ளியில் கல்வித் தரம் மோசம் என்றும், தனது தந்தை மது அருந்துவதால் குடும்பம் சீர்குலைந்திருப்பதையும் முதல் மந்திரியிடமே நேரடியாக அச்சிறுவன் முறையிட்டிருப்பது  சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பீகார் முதல் மந்திரி  நிதீஷ் குமார் மறைந்த தனது மனைவி மஞ்சு சின்ஹாவின் நினைவுதினத்தை அனுசரிப்பதற்காக நாளந்தா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான கல்யாண் பிகாவுக்குச் சென்றார். அங்கு தனது தந்தை கவிராஜ் ராம்லகன் சிங்கின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், தனது மனைவியின் திருவுருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார்.
பின்னர், அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சோனு குமார் எனும் 11 வயது சிறுவன் அவரைக் கைகூப்பி வணங்கி, “அய்யா, என் கல்விக்கு உங்கள் உதவி தேவை. என் தந்தை எனக்கு உதவவில்லை” என்று கூறி அழத் தொடங்கினான்.
அந்த சிறுவன் முதல் மந்திரி  நிதீஷ் குமாரிடம் கூறியதாவது:-
“எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்குவதில்லை, மேலும் அரசு பள்ளிகளில் கல்வியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மாநிலத்தில் கல்வி முறை மற்றும் மதுவிலக்கு இரண்டும் தோல்வியடைந்தன. அரசு உதவி செய்தால், படித்துவிட்டு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் ஆக விரும்புகிறேன். 
என் தந்தை பால் பொருட்களை விற்பனை செய்துவருகிறார். அவர் என் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. சம்பாதிப்பதையெல்லாம் மது அருந்துவதிலேயே செலவழிக்கிறார்.
இப்போது நான் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டியூசன் சொல்லி கொடுத்து அதன்மூலம் பெறும் பணத்தை கொண்டு படிப்புக்கு செலவழித்து வருகிறேன்” என்று முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் அதிகாரிகளிடம் கூறினான்.
அந்த நிகழ்ச்சியில் வந்திருந்த முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைவரும் அந்த ஆறாம் வகுப்பு மாணவனின் தைரியத்தைக் கண்டு திகைத்தனர்.இதையடுத்து, அச்சிறுவனின் புகார் குறித்து விசாரிக்குமாறு அருகில் இருந்த அதிகாரிகளுக்கு நிதீஷ் குமார் உத்தரவிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவன், “முதல் மந்திரி எனது கோரிக்கையை ஏற்று, என்னை நல்ல பள்ளியில் சேர்க்குமாறு தனது அதிகாரி ஒருவரைக் கேட்டுக் கொண்டார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை” என்று கூறினான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.