இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உடனடியாக அனுப்புவதாக இந்தியா உறுதி

புதுடெல்லி: இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதற்கு, இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர். இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து வந்தது. ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்தது.

போதிய அளவில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்காததாலும், மோசமான வானிலையாலும், நெல்,தேயிலை போன்ற வேளாண் பொருட்களின் உற்பத்தியும் இலங்கையில் வெகுவாக குறைந்தது. இதுவும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இலங்கை தூதர் மிலிண்டா மரகோடா, உரத்துறை செயலாளர் சதுர்வேதியை கடந்த வியாழக்கிழமை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் நடப்பு பருவ விவசாயத்துக்கு யூரியா விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை விநியோகம் செய்ய இந்தியா முடிவு செய்ததாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்காக உரத்துறை செயலாளர் சதுர்வேதிக்கு இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சதுர்வேதி கூறுகையில், ‘‘அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை என்பதை இந்தியா தனது கொள்கையாக கொண்டுள்ளது. இலங்கைக்கு தேவையான உரத்தை அனுப்ப கப்பலை ஏற்பாடு செய்யும் பணியில் உரத்துறை ஈடுபட்டுள்ளது.

தொடர்ந்து விநியோகம்

தற்போதுள்ள கடன் திட்டத்தின் கீழும், அதற்குப்பிறகும் தொடர்ந்து இலங்கைக்கு உரங்களை விநியோகிப்பது தொடர்பாகவும் நாங்கள் ஆலோசித்தோம்’’ என கூறினார்.

இலங்கைக்கு இந்தாண்டு ஜனவரி முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் கடன்கள், கடன் திட்டத்தின் கீழ் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.