ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் சவால்| Dinamalar

கீவ்-”ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடத்தப்படும், ‘யூரோவிஷன்’ பாடல் போட்டி, உக்ரைனின் மரியுபோலில் அடுத்த ஆண்டு நடத்துவோம்,” என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்தது, ரஷ்யாவுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிப்ரவரி 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றுவதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. அங்கு, அஜோவ்ஸ்டால் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதியை தவிர, இதர பகுதிகளை அவர்கள் கைப்பற்றிவிட்டனர்.

இந்நிலையில், இத்தாலியில், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடத்தப்படும், ‘யூரோவிஷன்’ என்ற பாடல் போட்டியில், உக்ரைனின், ‘கலுஷ்’ இசைக்குழு, முதல் பரிசை தட்டிச் சென்றது. அவர்கள் பாடிய, ‘ஸ்டெபானியா’ என்ற பாடல், போர் நடந்து வரும் உக்ரைனில் தேசப்பற்று பாடலாக மாறிவிட்டது. இதையடுத்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று அதிகாலை அறிக்கை வெளியிட்டார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:நம் துணிச்சல், உலக நாடுகளை வியக்க வைத்து உள்ளது; நம் இசை, ஐரோப்பாவை வென்றுவிட்டது.

அடுத்த ஆண்டு, யூரோவிஷன் பாடல் போட்டியை, உக்ரைன் அரசு நடத்தும். அதுவும், துறைமுக நகரமான மரியுபோலில், அந்த போட்டியை கோலாகலமாக நாங்கள் நடத்திக் காட்டுவோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைன் அதிபரின் இந்த சூளுரை, மரியுபோலை கைப்பற்றும் எண்ணத்தில் உள்ள ரஷ்ய படைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

latest tamil news

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையேயான ராணுவ ஒத்துழைப்புக்காக உருவாக்கப்பட்டது, ‘நேட்டோ’ அமைப்பு. அதில் இணைவதற்கு உக்ரைன் முயன்றதால், அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தும், நேட்டோ அமைப்பில் இணைய விரும்புவதாக அறிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புடின் நீக்கம்?

உக்ரைன் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி கைரிலோ புடானோவ் நேற்று கூறுகையில், ”உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், ஆகஸ்டு மாதம் திருப்புமுனை ஏற்படும். இந்த ஆண்டுக்குள், போர் முடிவுக்கு வந்துவிடும். இதில், ரஷ்யா தோல்வி அடைந்தால், அதிபர் புடின், ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார். அவரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே அங்கு துவங்கிவிட்டன,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.