ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி… ஜார்க்கண்ட் பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்கப்பிரிவு செயலாளராக இருந்தவர் பூஜா சிங்கால். 2000-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்தே ஊழல் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. பூஜா பண மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் மூத்த வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் அமலாக்கப்பிரிவில் புகார் செய்தார்.

அப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த அமலாக்க பிரிவு அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி பூஜாவுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் திடீரென ரெய்டு நடத்தினர். பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உட்பட மொத்தம் 18 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் 19 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 17.49 கோடி ரூபாய் ஆடிட்டர் சுமன் குமார் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சுமன் குமார் பூஜாவின் ஆடிட்டர் ஆவார். சுமன் குமார் அன்றே கைது செய்யப்பட்டார்.

பூஜா சிங்கால்

இதையடுத்து முதல் முறையாக பூஜாவை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் கடந்த 11-ம் தேதி இரண்டாவது முறையாக அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு அழைத்தது. பூஜா, அவரின் கணவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணையில் பூஜா பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் தனது கணவர் அபிஷேக் மற்றும் ஆடிட்டர் சுமன் குமார் ஆகியோரின் துணையோடு பதவிக்கு வந்த நாளில் இருந்து தான் வகித்த அனைத்து பதவிகளிலும் ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 2007-13-ம் ஆண்டு வரை பூஜா ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை கமிஷனர், மாவட்ட நீதிபதி என பல பதவிகளில் இருந்துள்ளார். இக்காலக்கட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் பல ஊழல்களை செய்துள்ளார்.

ஊழல் வெளியில் வந்தது எப்படி?

கடந்த 2012-ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஜூனியர் எஞ்சினியர் ராம் பிரசாத் சின்ஹா என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ராம் பிரசாத்தை வேறு ஒரு பண மோசடி தொடர்பாக கைது செய்து விசாரித்தனர். அவரும் அதிகாரத்தில் இருந்த போது 18 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தியதில் 2007-13ம் ஆண்டில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூனியர் எஞ்சினியராக இருந்த போது குந்தி, சத்ரா, பலமு போன்ற மாவட்டங்களில் முறைகள் நடந்திருப்பது தெரிய வந்தது. அதோடு எந்த அரசு வேலையாக இருந்தாலும் அதில் 5 சதவீதம் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துவிடவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தனக்கு உத்தரவிட்டு இருந்ததாக ராம்பிரசாத் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அந்நேரம் பூஜா இம்மாவட்டங்களில் துணை கமிஷனர், மாவட்ட நீதிபதி உட்பட போன்ற பதவியில் இருந்தார். பூஜாவிற்கு இதில் முக்கிய பங்கு இருந்ததாக தெரிவித்தார். ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் 2009-10ம் ஆண்டில் பூஜா துணை கமிஷனராக இருந்த போதுதான் மகாத்மா காந்தி ஊரகவேலை வாய்ப்பு திட்டத்தில் பூஜா 18 கோடி வரை முறைகேடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2008-11-ம் ஆண்டுகளில் பூஜா தனது வங்கியில் 1.43 கோடியை டெபாசிட்டாக பெற்றுள்ளார். அதில் 16.57 லட்சத்தை தனது நிதி ஆலோசகரும், ஆடிட்டருமான சுமன் குமார் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பூஜாவிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பாஜக ஆட்சியில் பூஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று அவரை அரசு விடுவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சுமன் குமாரிடம் விசாரித்த போது பூஜா சொல்பவரிடம் சென்று பணத்தை வாங்கி வருவேன் என்றும் நிலம் வாங்குவதற்காக பூஜாவின் கணவர் நடத்தும் மருத்துவமனை நிலத்தை வாங்க பில்டர் ஒருவருக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.