"என் அப்பா காங்கிரஸ்காரர்; எனக்கு அந்த கட்சி பிடிக்கவில்லை ஏனென்றால்…" – தமிழிசை சௌந்தரராஜன்

ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் `கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ தொடரில் அரசியல், கலை, சினிமா துறை சார்ந்த ஆளுமைகளுடன் பேராசிரியர் பர்வீன் சுல்தானா உரையாடி வருகிறார். தொடரின் இந்த வாரத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், பா.ஜ.க -வின் அரசியல் பிரமுகருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் தன் குடும்பம், இளமைப் பருவம், அரசியல் பயணம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். சுவாரஸ்யமிக்க அந்த உரையாடலின் முதல் பகுதி இதோ…

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா

அப்பா, சித்தப்பா என எல்லோரும் உறுதியான காங்கிரஸ் சிந்தனையாளர்கள், அப்படிப்பட்ட குடும்பத்திற்குள் பாரதிய ஜனதாவின் ஒரு தலைவர் எப்படி?

“உலகத்திற்கே மிக அதிசயமான ஒரு கேள்விதான் இது. என்னுடைய தாத்தாக்கள் கூட நேரடியான அரசியலில் இல்லை என்றாலும் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏதாவது ஒரு விதத்தில் பங்கெடுத்துக்கொண்டவர்கள். உதாரணத்திற்கு அப்பாவின் அப்பா கதர் தரி வைத்திருந்தார்கள். அதனால் காந்தி கதர் சட்டை இயக்கத்தில் பங்கு எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் தரி நெய்வதை நானே பார்த்திருக்கிறேன். இன்றளவும் அப்பா கதர் ஆடைகள் அணிய காரணம் என் தாத்தாதான். மறுபக்கம் அம்மாவுடைய அப்பா ஒரு செல்வந்தர். நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் தலைவர்கள் வருகையில் அவர்களை தங்க வைத்து உபகாரங்கள் செய்வதன் மூலம் பக்கபலமாக இருந்தார். அதனால் இரண்டு பேருமே ஏதாவது ஒரு வகையில் தலைவர்களோடு பழக்கம் கொண்டிருந்தனர். அதனடிப்படையில் அவர்கள் தேசிய எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.”

தமிழிசை சௌந்தரராஜன்

“என்னைப் பொறுத்தவரை அப்பா சார்ந்த இயக்கம் எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்றால், இளம் வயதில் நாம் அனைவரும் வளர்ச்சியை நோக்கி சிந்தனையைச் செயல்படுத்துவோம். வெளிநாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும். வளர்ச்சியைப் பற்றி இந்தியா ஏன் சிந்திக்கவில்லை என்று ஒரு ஆதங்கம். வளர்ச்சியை பற்றிச் சிந்தித்து இருந்தாலும் எதிர்க்கட்சி இல்லாத 400 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம் இருந்தும் முழுமையான வளர்ச்சியை நாம் நினைத்த அளவிற்கு சுதந்திரமடைந்தும் நம்மால் கொண்டுவர முடியவில்லையே என்ற ஏக்கம். அதேபோல மதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்களை ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது வளர்ச்சியைப் பற்றி மட்டுமே அவர் பேசினார். ஆகையால் தேசியத்தின் பக்கம் எண்ணம் போகத் தொடங்கியது. மேலும் பிராந்திய கட்சிகள் மீது பெரிதாக அபிப்பிராயம் வரவில்லை. சிறுவயதிலிருந்தே அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாற்றாக ஒரு தேசியக் கட்சி இருக்கும்போது, அதில் சேர முடிவெடுத்தேன்.”

“இந்த முடிவால் உங்களை குடும்பத்தில் ஒரு கலகக்காரியாகப் பார்த்தார்களா?”

தமிழிசை சௌந்தரராஜன்

“ஆமாம் நிச்சயமாக! கலகக்காரியாக தான் பார்த்தார்கள். அம்மாவை பொறுத்த வரை அப்படி எல்லாம் பார்க்கவில்லை. அப்பா சித்தப்பா எல்லாம் எதற்காக அந்த இடத்திற்கு போக வேண்டும் என்று எதிர்த்தனர். சித்தப்பா எல்லாம் வெகுவாக எதிர்த்தார். சித்தப்பா வசந்தகுமார்மீது அன்பும் மரியாதையும் உண்டு. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு சில சமயம் கடுமையான வார்த்தைகள் எல்லாம் பேசியுள்ளார். தொண்டர்களும் சிலபேர் அப்பாவை எதிர்த்து அரசியல் பண்ணுவதைப் பற்றி விமர்சித்து இருக்கின்றனர். இந்த சூழலில் அம்மாவும் கணவரும் மிகுந்த பக்கபலமாக இருந்தனர். உனக்கு எது நல்லது என்று நினைச்சுயோ அதை நீ முடிவு எடுத்துவிட்டாய் என்று அம்மா கூறினார். ஆகையால் என்றும் நான் பெருமைப்படுவது என்னவென்றால் அப்பா அமைத்துத் தந்த பாதையில் வளராமல் எனக்கென நான் ஒரு பாதையை அமைத்துக் அதில் கடினப்பட்டு உழைத்து உயர்ந்து வந்திருக்கிறேன் என்பதை எண்ணிதான்.”

அரசியல் பெண்களுக்கு உகந்த இடமாக இருக்கிறதா? அதில் உங்கள் அனுபவம் பற்றி பகிருங்கள்…

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

“நானே சொல்லக்கூடாது. இன்றளவில் இது ஆண்களின் உலகம்தான். ஆனால் அரசியலில் பெண்கள் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். பெண்கள் வந்து கொண்டும் இருக்கிறார்கள். உள்ளாட்சியில் பினாமிகளாக இல்லாமல் பெண்களே ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஒரு ஆதங்கமும் எனக்கு உண்டு. ஆனால் பெண்கள் அரசியல் உள்ளே வந்து உயர்வது என்பது மிக மிக மிக சவாலான காரியம்.”

எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்? எப்பொழுதும் மலர்ச்சியுடன் இருக்கிறீர்கள், அப்படி இருப்பதற்கான சக்தி என்ன?

தமிழிசை சௌந்தர்ராஜன்

“அதைத்தான் நீங்களே சொல்லி விட்டீர்கள் சக்திதான் காரணம். எனக்கு இறை நம்பிக்கை அதிகம். காலையில் எழுந்தது முதல் அன்றைய நாளை ரசிக்கத் தொடங்கிவிடுவேன். நேற்றைய நாளின் பிரச்னைகளை விட்டுவிட்டு, புதிய நாளிற்கான ரசனையைத் தொடங்கிவிடுவேன். உடை உடுத்துவதில் தொடங்கி எனது பணியைத் தொடங்குவது என அனைத்தையும் ரசிப்பேன். இறைவன் நமக்கு அளித்திருக்கும் இந்த வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ரசிப்பதற்கே, கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்தையும் நான் ரசிப்பேன். பாரம் இல்லாத மனிதர்களே கிடையாது. புத்தகங்கள்தான் எனக்கு மிகப்பெரிய பலம். ஏதாவது ஒரு கடினம் வரும்போது ஏதோ ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு வரி உறுதுணையாக இருக்கும் என்று நம்புவேன்.”

முழுமையான வீடியோ நேர்காணலைக் காண

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.