முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றம் அல்ல! : மும்பை ஐகோர்ட் அதிரடி

மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஒருவர், கடந்தாண்டு ஏப்ரல் 17ம் தேதி உள்ளூர் போலீசில் அளித்த புகாரில், ‘வீட்டின் அலமாரியில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. என் மகனிடம் விசாரித்ததில், அவன் ஆன்லைன் கேம் விளையாடியதையும், அந்த ஆப்பை ரீசார்ஜ் செய்வதற்காக அதேபகுதியை சேர்ந்த ஒருவரிடம் பணம் கொடுத்தாக கூறினான். மேலும், அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக எனது மகன் கூறினான். எனவே, பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார். அதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்)  மற்றும் பிரிவுகள் 8 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 12 (பாலியல்  துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குபதியப்பட்டது. தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றம்சாட்டப்பட்ட நபரின் தரப்பில் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய் அளித்த உத்தரவில், ‘பாதிக்கப்பட்டவரின் புகார் மனு, முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) ஆகியவற்றை பார்க்கும் போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்டவரின் அந்தரங்க உறுப்பை தொட்டும், அவரது உதடுகளில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. எனது கருத்தின்படி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-இன் கீழ் இது, இயற்கைக்கு மாறான பாலியல் குற்றமாக இருக்க முடியாது. பிரிவு 377, ஆண், பெண் அல்லது மிருகத்துடன் தானாக முன்வந்து உடலுறவு கொள்பவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது. எப்ஐஆரில் உள்ள விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடும்படியான ஆதாரம் இல்லை. அதனால், பிரிவு 377-ஐ பயன்படுத்தியதற்கான காரணம் தெளிவாக இல்லை. எனவே கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.