விதிமுறைகளை மீறிய கட்டிட வரைபட அனுமதிக்கு கடும் நடவடிக்கை – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை

மதுரை: ‘‘ஆவணங்களை முழுமையாக ஆராயாமல் விதிமுறைகளை மீறி கட்டிட வரைபட அனுமதி வழங்கும் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களுக்கு துணைபோகும் அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மனைப்பிரிவு அங்கீகாரம், அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:

மதுரை நகரம் உட்கட்டமைப்பு வசதிகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. பொதுமக்கள் புதிய வீட்டுமனைகளை வாங்கும்போது அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளை வாங்க வேண்டும். அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வாங்கும் நேரங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சாலை விரிவாக்கம், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. அதனால், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வாங்குவதை மக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் குறிப்பிட்ட மனைப்பிரிவின் உரிமையாளர்களால் கிராம ஊராட்சியின் பெயருக்கு சாலை மற்றும் பொதுப்பகுதிக்கான இடங்களை தானமாக பெறப்பட்ட இடங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யும் பணிகளை உறுதி செய்திட வேண்டும். இது தொடர்பான விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்றி உறுதி செய்திட வேண்டும். மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை சார்ந்த அலுவலர்கள் மாவட்ட ஊரகப் பகுதிகளில் இதுநாள் வரை அமையப்பெற்ற புதிய மனைப்பிரிவுகள மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை ஆகியவற்றிற்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை உறுதி செய்திட வேண்டும். இனிவரும் காலங்களில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கிடும்போது சாலை மற்றும் பொதுப்பகுதிக்கான ஆவணத்தினை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெயருக்கு மாற்றம் செய்த பிறகே உரிய ஆவணங்களுடன் அதற்கான உத்தரவினை ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் மனைப்பிரிவுகள் உருவாக்கும் போது உரிய ஆவணங்களின்படி அளவீடு செய்து பொதுப்பகுதியை அடையாளம் காணுதல், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பாதுகாத்தல் போன்ற பெரும் பொறுப்பு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகத்தை சேரும். ஊரகப் பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளில் வீடுகள் கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதி வழங்கும்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆவணங்களை முழுமையாக ஆராயாமல் விதிமுறைகளை மீறி கட்டிட வரைபட அனுமதி வழங்குவது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள், துணைபோகும் அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, பதிவுத்துறை மற்றும் நகர் ஊரமைப்பு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.