மத்திய அரசுக்கு எதிராக – சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) கட்சிகளின் கண்டன இயக்கம்.! வெளியான அறிக்கை.!

சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) காட்சிகள் இன்று கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே வறுமையில் உள்ள மக்கள் பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. ஆனால் மோடி அரசாங்கமோ எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளன. காய்கறி, தானியங்கள், உணவு எண்ணெய் விலை என அனைத்துமே அதிகரித்துள்ளது.  நிலக்கரி பற்றாக்குறைக்கு வழிவகுத்த அரசின் கொள்கைகளால் இப்போது மின்சார உற்பத்தியும் பாதித்துள்ளது.

மோடி அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராகவும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்திடவும் மே 25 முதல் மே 31 வரை தேசம் தழுவிய அளவில் இயக்கம் நடத்திட வேண்டுமென இடதுசாரி கட்சிகள் விடுத்துள்ள அறைகூவலின் அடிப்படையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) ஆகிய கட்சிகளின் சார்பில் கண்டன இயக்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை  மொத்தமாக திரும்பப் பெற்றிடு!

பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிடு!

வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்கிடு!

ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்து!

வேலை வாய்ப்பை பெருக்கிடுக!

நகரப்புற வேலை உறுதி சட்டம் கொண்டு வருக!

வேலையில்லா கால நிவாரணம் அளிப்பதற்கான மத்திய சட்டத்தை நிறைவேற்றுக!

அரசுத்துறையில் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்பிடுக!

இதுதொடர்பாக இன்று (17.05.2022) நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 2022 மே 26-27 ஆகிய தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும், 2022 மே 25-31 ஆகிய தேதிகளில் வீடு, வீடாக துண்டு பிரசுர விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வியக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை கேட்டுக் கொள்வதோடு, பொதுமக்களும் பேராதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.