மகள்களுக்காகக் காத்திருக்கும் இமான்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான். அவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மறைந்த பிரபல சினிமா டிசைனரான உபால்டுவின் மகள் அமலியைத்தான் அவர் திருமணம் செய்து கொண்டார். அமலிக்கு தனது முதல் கணவர் மூலம் ஒரு மகள் இருக்கிறார்கள்.

இரண்டாவது திருமணமான சில தினங்களுக்குப் பிறகுதான் தனது திருமணத்தைப் பற்றிய பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் இமான். அதில், “மே 15ம் தேதி எனக்கு அமலி உபால்டுடன் மறுமணம் நடைபெற்றது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். எனது அப்பா டேவிட் கிருபாகர தாஸ் என்னுடைய கடினமான காலங்களில் ஒரு வலிமையான தூணாக இருந்ததற்கு மிகவும் நன்றி. கடந்த சில வருடங்களாக எனது குடும்பத்தினரும் நானும் வாழ்க்கையில் சந்தித்த எல்லா சவால்களுக்கும் பெரியவர்களால் பார்த்து செய்யப்பட்ட இந்தத் திருமணம் ஒரு முக்கிய மருந்தாக அமைந்தது.

எனது அம்மா மறைந்த மஞ்சுளா டேவிட்டின் ஆசீர்வாதமும் எனக்கு உண்டு. சிறந்த பெண்மனியான அமலியை அடைவதற்குக் காரணமாக இருந்த எனது குடும்ப உறவினர்கள், எனது நலம் விரும்பிகள் ஆகியோருக்கு நன்றி. இனிமேல், அமலியின் அன்பு மகள் நேரத்ரா என்னுடைய மூன்றாவது மகள். நேத்ராவின் அப்பாவாக இருப்பதற்கு அது வானுயர்ந்த மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.

எனது அன்பு மகள்கள் வெரோனிகா, பிளஸிகா எனது திருமணத்தில் இல்லாதது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம். ஒரு நாள் எனது மகள்கள் வீட்டிற்கு வருவார்கள் என அதிகபட்ச அன்புடன் நாங்கள் பொறுமையுடன் காத்திருக்கிறோம். நான், அமலி, நேத்ரா மற்றும் எனது உறவினர்கள் வெரோனிகா, பிளஸிகாவை வரவேற்க டன் கணக்கில் அன்புடன் வரவேற்போம்.

அமலியின் பெரிய குடும்பத்தினரின் நிபந்தனையற்ற, விலைமதிப்பற்ற அன்புக்கு எனது நன்றி. இத்தனை வருடங்களாக எனக்கு ஆதரவாக இருக்கும் இசை ரசிகர்களுக்கு எனது நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.