புதுச்சேரி,-சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அதிருப்தி அடைந்துள்ள டி.ஜி.பி., கிருஷ்ணியா, போலீஸ் ஸ்டேஷன் நிலைய பொறுப்பு அதிகாரிகள் இரவில் தங்கி பணியாற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும், சமீப கலமாக வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அதிருப்தியடைந்த டி.ஜி.பி., கிருஷ்ணியா, ‘மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் போலீஸ் ஸ்டேஷன் நிலைய பொறுப்பு அதிகாரிகள், மறு உத்தரவு வரும்வரை 10 நாட்கள் இரவில் போலீஸ் ஸ்டேஷனில் தங்கி பணியாற்ற வேண்டும்.இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கடந்த 20ம் தேதி போலீஸ் வயர்லெஸ்சில் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.இதன்படி கடந்த 3 நாட்களாக இரவில் வீட்டிற்கு செல்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் நிலைய அதிகாரிகளான இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளார்களா, இரவில் ரோந்து சென்றார்களா என்று உளவுத் துறை மூலமாக டி.ஜி.பி., கிருஷ்ணியாவுக்கு தினமும் ‘ரிப்போர்ட்’ அனுப்பப்பட்டு வருகிறது.
காரணம் என்ன
பகலில் தீயாய் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷன் நிலைய அதிகாரிகள், இரவு நேரங்களில் பெரிய குற்றங்கள் நடக்கும்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவதில்லை. அவர்களை தொடர்பு கொள்வதும் சிக்கலாக உள்ளது.இதன் காரணமாக இரவு நேரங்களில் புகாருடன் வரும் பொது மக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைப்பதில்லை.இது தொடர்பாக டி.ஜி.பி., கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் விளக்கம் கேட்கப்பட்டது ஆனாலும் போலீசாரின் போக்கில் மாற்றம் இல்லை.இதேபோல், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள், இரவு நேரங்களில் சர்வசாதாரணமாக தங்கள் வீட்டிற்கு வந்து செல்கின்றனர். அத்துடன் இரவில் தான் வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும் நடக்கின்றன.இதுபோன்ற சூழ்நிலைகளில் போலீஸ் டேஷன் பொறுப்பு அதிகாரிகள் பணியில் இல்லாதது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.இதன் காரணமாகவே இரவு நேரங்களில் நடக்கும் பிரச்னைகள் முழுவ தும் அறிந்தும் கொள்ளும் வகையில் நிலைய பொறுப்பு அதிகாரிகள் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement