தாஜ்மகால் முதல் குதுப்மினார் வரை | சர்ச்சைக்குள்ளான 5 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மசூதிகள் – ஒரு பார்வை

இந்தியாவில் முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை மிக்க பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் மசூதிகள் சில இப்போது இந்தியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன.

வாரணாசி, ஆக்ரா, மதுரா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் சர்ச்சையில் சிக்கிய இந்த கட்டிடங்கள் அமைந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. இருந்தாலும் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்த முகலாய கால கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் முன்னொரு காலத்தில் இந்து மக்கள் வழிபட்டு வந்ததாக ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர். சில இடங்களில் இந்து வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டும், சில இடங்களில் அதனை மறக்கடித்தும் இந்த கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சர்ச்சையில் தாஜ்மகால், குதுப்மினார் போன்ற முக்கிய இடங்களும் சிக்கியுள்ளது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

> தாஜ்மகால்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டடதாக வரலாறு. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.

அண்மையில் தாஜ்மகாலில் பூட்டப்பட்டுள்ள 22 ரகசிய அறைகளை திறக்க வேண்டும் என பாஜக சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் (லக்னோ கிளை) வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சர்ச்சைக்குள்ளான சில அறைகளின் படத்தை இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கூட தாஜ்மகால் குறித்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளன.

> குதுப்மினார்: டெல்லியில் அமைந்துள்ளது குதுப்மினார். சுமார் 238 அடி உயரம் கொண்ட கோபுரம் தான் குதுப்மினார். இதனை வெற்றியின் அடையாள சின்னமாக நிறுவியதாக தகவல். இதன் பணிகள் 12-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 13-ஆம் நூற்றாண்டில் நிறைவு பெற்றுள்ளது. யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடம். இருந்தாலும் அந்தப் பகுதியில் இருந்த இந்து மக்கள் வழிபட்டு வந்த ஸ்தலத்தை இடித்து தான் குதுப்மினார் கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

அண்மையில் இந்தப் பகுதியை ஆய்வுக்கு உட்படுத்த மத்திய அரசு திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனாலும் அதனை மத்திய அமைச்சர் ஜி.கே. ரெட்டி திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் குதுப்மினார் வளாகத்தில் சமண மற்றும் இந்து மக்களின் கோவில்கள் இருந்ததாக சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இந்த வழக்கு வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991-க்கு எதிராக உள்ளதாக சொல்லி தள்ளுபடி செய்தார் நீதிபதி.

> கியான்வாபி மசூதி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. கடந்த 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதனை நிறுவியவர் முகலாய மன்னர் அவுரங்கசீப்.

மசூதி கட்டப்பட்ட இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும். அதை இடித்தே மசூதி கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அண்மையில் மசூதி வளாகத்தின் சுற்று சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபாடு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனால் மசூதியில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 26-ஆம் தேதி அன்று கியான்வாபி – சிங்கார கவுரி அம்மன் வளாக வழக்கில் அதனை நிர்வகிப்பது யார் என நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது.

> ஷாஹி ஈத்கா மசூதி: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ளது ஷாஹி ஈத்கா மசூதி. இந்த மசூதி அங்குள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் ஆலய வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மசூதியை கட்டியதும் அவுரங்கசீப் தான். 17-ஆம் நூற்றாண்டில் கட்டியதாக தகவல்.

இந்த மசூதியை நேரில் பார்க்கவே மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இருந்தாலும் இதனை அகற்ற வேண்டும் என ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மசூதியை துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர். இரும்பு முள் வேலியும் போடப்பட்டுள்ளது. இந்த மசூதியை கிருஷ்ணர் ஆலயத்தின் வளாகத்தில் இருந்து பார்க்கலாம்.

> ஜாமியா மசூதி: கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கப்பட்டணம். இந்தப் பகுதியில் அமைந்துள்ள மசூதி தான் ஜாமியா மசூதி. இந்த மசூதி பகவான் ஆஞ்சநேயர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டு உள்ளதாகவும், அதனால் ஆய்வு நடத்த வேண்டுமெனவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.