சென்னை: சென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி அறிவிக்கப்படுகிறார்.
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் இன்று(மே 28) காலை 11 மணி அளவில் நடக்கிறது. பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உட்பட தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, கட்சியின் சார்பில் கடந்த 24-ம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஓய்வறியா உழைப்பாளியான ஜி.கே.மணி, 25 ஆண்டுகளாக கட்சியை அருமையாக வழிநடத்தியுள்ளார் என்று ராமதாஸ் பாராட்டினார்.
ஜி.கே.மணிக்கு புதிய பொறுப்பு
இதனிடையே, கட்சியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, புதிய தலைவராக அன்பு மணியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வு அறிவிப்பு இன்று நடக்கும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகிறது. தற்போது கட்சியின் தலைவராக உள்ள ஜி.கே.மணிக்கு ஆலோசகர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவை பாமக தலைவராக ஜி.கே.மணி தொடர்ந்து இருப்பார். அன்புமணி வகித்து வரும் இளைஞர் அணித் தலைவர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.