நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க இந்தியக் கடனுதவி , ஏனைய கடனுதவிகளைப் பயன்படுத்தவும்

இந்தியக் கடனுதவி மற்றும் ஏனைய கடனுதவிகளைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் பரிந்துரை வழங்கினார்.

2022ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வரையில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை குறித்தும், அதனை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் (31) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இந்தப் பரிந்துரையை வழங்கினார்.

இந்தியக் கடனுதவியில் 200 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றிருந்தாலும் 2022 ஏப்ரல் 22 ஆம் திகதி வரையில் 55.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரண வழங்கல்களுக்கு மாத்திரமே அமைச்சின் மருத்துவ உப குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டிருந்ததாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அது நிதியுதவியின் 28% எனவும், 2022 மே 18 ஆம் திகதி வரை 92.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான விலைப்பட்டியல் மாத்திரம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குழுவின் தலைவரால் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும் சூழ்நிலையில் இந்த நிதியைப் பயன்படுத்தி தேவையான மருந்துகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர். 

விஷேடமாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை பொதுமக்களின் வாழ்க்கையுடன் தொடர்புபட்ட பிரச்சினை என்பதால் தற்போதைய நெருக்கடி நிலைமையை விரைவில் தீர்த்து அத்தியாவசிய மருந்துகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார். அதற்கமைய, அந்த நிதியைப் பயன்படுத்தி தேவையான மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை வழங்கினார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தற்பொழுது அது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய அத்தியாவசிய மருந்துகளை இந்த நிதியினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். விஷேடமாக அமைச்சர்கள் சிலர் இந்தக் காலப்பகுதியில் நியமிக்கப்பட்டமையாலும் இந்தப் பணிகள் தாமதமடைந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்திய கடனுதவிக்கு மேலதிகமாக, மருந்துப் பொருட்கள் பெற்றுக்கொள்வதற்குக் கிடைத்துள்ள உலக வங்கிக் கடன் (WB), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி (WHO), ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி (ADB) மற்றும் ஏனைய நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள உதவிகளை விரைவாகப் பயன்படுத்தாமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. விஷேடமாக இந்தியக் கடனுதவி உள்ளிட்ட இந்த அனைத்து உதவிகளும் 330 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் எனவும் அவை இதுவரை செலவு செய்யப்படவில்லை என்பது இங்கு புலப்பட்டது. விரைவில் நிர்வாகத் தீர்மானங்கள் மற்றும் அனுமதியைப் பெற்று இந்த நிதியைப் பயன்படுத்தி மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தால் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை மருந்துப் பற்றாக்குறை ஏற்படாது என வருகை தந்திருந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய கோப் தலைவர், மருந்துப் பற்றாக்குறையை நீக்குவதற்கு கிடைக்கப்பெற்றுள்ள அமெரிக்க டொலர் நிதியைச் சரியாக முகாமைத்துவம் செய்து விரைவாகப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்தார்.  அதனால் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு இருக்கவில்லை என்றும் முகாமைத்துவம் செய்வதில் விரைவாக அதனை மேற்கொள்ளாமை தொடர்பில் சிக்கலொன்றை அவதானிப்பதாகவும் கோப் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போது ரூபாய் தட்டுப்பாடு இருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன்போது ஒன்லைன் ஊடாக நிதி அமைச்சின் செயலாளரும் குழுவில் பங்குபற்றி அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் விரைவாக அதனைத் தீர்த்துக்கொள்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மருத்துவ வழங்கல்களை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட கணினிக் கட்டமைப்பு உரிய முறையில் இற்றைப்படுத்தாமை மற்றும் பயன்படுத்தாமை தொடர்பிலும் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனத்துக்கு சுமார் 645 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளமையும் அதன் பராமரிப்புக்கு 5 மில்லியன் ரூபாய் வழங்குகின்றமையும் இதன்போது புலப்பட்டதுடன், எனினும் அந்தக் கட்டமைப்பு முறையாகச் செயற்படவில்லை என்பதும் புலப்பட்டது. இதனால் குறைந்த செலவில் புதிய கணினிக் கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் 80 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், நாட்டில் உள்ள மருந்துப் பொருட்களின் தேவையைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தியதுடன், அத்தகைய முறையொன்றை மிகவும் துல்லியமாகப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்த முறையூடாக நாளாந்த மருந்துத் தேவை மற்றும் தட்டுப்பாட்டை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் (SPC), சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவு (MSD) மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை (NMRA) ஆகிய நிறுவனங்களின் கொள்வனவு முறை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து வினைத்திறனாக செயற்படுவதன் அவசியம் குறித்து கோப் தலைவர் வலியுறுத்தினார். இந்த நிறுவனங்கள் ஊடாக நாட்டின் மருந்துத் தேவைகளைக் கண்டறிதல் மற்றும்  மருந்துகள் கொள்வனவு செய்வது போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த நிறுவனங்கள் வினைத்திறனாக ஒன்றுடனொன்று தொடர்புபட்டு செயற்படுவது நாட்டுக்கு முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இருதய நோய் தொடர்பான அத்தியாவசிய மருந்துகள், ரேபீஸ் நோய் தொடர்பான அத்தியாவசிய மருந்துகள், மயக்க மருந்துகள் மற்றும் ஒவ்வாமை தொடர்பான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் அவ்வாறான அத்தியாவசிய மருந்துகளுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய மருந்துகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று, 1990 அவசர சேவையில் காணப்படும் மருந்துப் பற்றாக்குறையை நீக்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ ரவுப் ஹகீம், கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ இரான் விக்ரமரத்ன, (கலாநிதி) கௌரவ ஹர்ஷ டி. சில்வா, (கலாநிதி) கௌரவ சரத் வீரசேகர, (கலாநிதி) கௌரவ நாலக கொடஹேவா, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ எஸ். எம். மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.