‘‘பாடகர் கேகே கட்டாயப்படுத்தப்பட்டார்; அது கொலை’’ – பாஜகவின் திலீப் கோஷ் குற்றச்சாட்டு

கொல்கத்தா: பின்னணி பாடகரான கேகே கட்டாயப்படுத்தி பாட வைக்கப்பட்டார் எனவும், அது கொலை என மேற்குவங்க மாநில பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் செவ்வாய் இரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் கேகேவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏற்கெனவே கோரியுள்ளன.

திலீப் கோஷ்

இந்தநிலையில் பின்னணி பாடகரான கேகே கட்டாயப்படுத்தி பாட வைக்கப்பட்டார் எனவும், அது கொலை என மேற்குவங்க மாநில பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது

‘‘கொல்கத்தாவில் நிகழ்ச்சியின் போது பின்னணி பாடகரான கேகே இறந்தார். இது எந்த கல்லூரியும் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல. நிகழ்ச்சிக்கு டிஎம்சி தலைவர்கள் ஏற்பாடு செய்தனர். மன உளைச்சலுக்கு ஆளானாலும் அவர் பாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வியர்த்தது. அவர் வெளியேற விரும்பினார். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார்” என்று கூறினார்.

அவரது பேட்டிக்கு திரிணாமுல் காங்கிரஸ் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியதாவது:

திலீப் கோஷ் தனது வாரிசான மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் உட்பட தனது கட்சி சகாக்களைத் தாக்கியதற்காக கட்சித் தலைமையால் கண்டிக்கப்பட்டார். பாஜகவில் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள திலீப் கோஷ் முயற்சி செய்து வருகிறார். இதன் காரணமாக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருகிறார்.

கோஷை விட கேகேவின் மேலாளருக்கு நன்றாகத் தெரியும். ஒருவரின் மரணத்தின் மீது இத்தகைய மலிவான மற்றும் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவது பாஜகவின் கலாச்சாரம். திலீப் கோஷைப் பொறுத்தவரை இது இருப்புக்கான போராட்டம். அவர் பாஜக தலைமையால் கண்டிக்கப்பட்டுள்ளார். அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். அதனால்தான் இதுபோன்று பேசி வருகிறார்’’ என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.