இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மீதுதாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்க அமைச்சர்| Dinamalar

வாஷிங்டன்:இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன், சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:
உலகளவில் மத சுதந்திரத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும். இதற்காக சர்வதேச நாடுகள், நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவோம். அடுத்த மாதம் பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அனைத்து மக்களும் அவரவர் மத வழிபாடுகளை சுதந்திரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். உதாரணமாக, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. அங்கு, பல மதத்தினர் வசிக்கின்றனர். எனினும் அங்கு சிலர் மீதும், வழிபாட்டுதலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

நைஜீரியாவில் உள்ள பல மாகாண அரசுகள், தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவோர் மீது அவதுாறு வழக்கு தொடுக்கின்றன. மத விரோத சட்டத்தின்படி தண்டிக்கப்படுகின்றனர். சீனாவில், கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு மாறானவர்களின் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்படுகின்றன.
பவுத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களும் இதில் விதி விலக்கல்ல. கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், புத்த மதத்தினருக்கு வேலைவாய்ப்புகளும், குடியிருப்புகளும் மறுக்கப்படுகின்றன. ஆப்கன், பாக்., ஆகியவற்றிலும் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. பாக்.,கில் மத நிந்தனை குற்றத்தின் பேரில், கடந்த ஆண்டு, 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.