தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு

புது டெல்லி:
பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி. இடங்கள் காலியாகின்றன. இந்த 57 எம்.பி. இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வரும் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மேல்சபை எம்.பி.க்களாக உள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (மூவரும்  தி.மு.க.) எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீத கிருஷ்ணன், ஏ.விஜயகுமார் (மூன்று பேரும் அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலம்  கடந்த 29-ந்தேதியுடன் நிறைவுபெற்றது.
தமிழகத்தில் இருந்து இந்த 6 பேருக்கு பதில் புதிதாக 6 பேரை தேர்வு செய்ய ஜுன் 10-ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் 4 மேல்சபை எம்.பி. பதவிகளை பெற முடியும். அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அ.தி.மு.க.வில் இருந்து 2 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். 
இந்நிலையில் தி.மு.கவுக்கு உள்ள 4 இடங்களில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர். கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சார்பில்  சி.வி சண்முகம், தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 
இந்நிலையில் இந்த மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து 13 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததாகவும் அதில் 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.