பெங்களூரு: ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்த் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் பெங்களூருவில் நாட்டிலே மிகப்பெரிய தனியார் விண்கல தயாரிப்பு மையத்தை பெங்களூருவில் புதன்கிழமை திறந்தது. கர்நாடக தொழில் மேம்பாட்டு துறையின் விண்வெளி பூங்காவில் அமைந்துள்ள இந்த மையம் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
இதில் ஒரே நேரத்தில் நான்கு பெரிய விண்கலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனையை நடத்த முடியும். இந்த மையத்தில் உள்ள 4 அலகுகளும் தனித்தனியாக இயங்குபவை. விண்கலங்களை சோதிக்கும்போது இந்த அலகுகள் தனியாகவே இறுதிநிலை வரை ஒருங்கிணைப்பு சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்வெளி துறையின் தலைவர் எஸ்.சோமந்த் கூறுகையில், “கடந்த 60 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. தற்போது அதன் அடுத்தகட்டமாக தனியார் நிறுவனங்களும் சொந்தமாக செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணில் ஏவலாம் என்ற நிலையை எட்டியுள்ளது” என்றார்.