பாலியல் புகாரில் சிக்கிய நடிகரிடம் 9 மணி நேரம் விசாரணை

மலையாள திரையுலகில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு துணை நடிகர் ஒருவரின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதும் அதிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று ஒரு மாதம் தலைமறைவாக இருந்ததும் தான். துணை நடிகை ஒருவர், நடிகர் விஜய்பாபு தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் அடித்து துன்புறுத்தினார் என்றும் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து வெளிநாடு தப்பி சென்ற விஜய்பாபு ஜார்ஜியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் அங்கிருந்தபடியே முன் ஜாமீனுக்கும் விண்ணப்பித்தார். ஆனால் அவர் நேரில் ஆஜரானார் மட்டுமே முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என நீதிமன்றம் கறாராக கூறிவிட்டது.

இந்த நிலையில் கேரளா திரும்பிய நடிகர் விஜய்பாபுவிடம் போலீசார் தொடர்ந்து 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விஜய்பாபு ஏற்கனவே கூறியது போல, இது தனக்கும் சம்பந்தப்பட்ட நடிகைக்கும் இடையே புரிதல் உணர்வோடு, சம்பந்தப்பட்ட நடிகையின் முழு சம்மதத்துடன் நடந்த விஷயம். தான் புதிதாக தயாரிக்கும் படத்தில் அவருக்கு வாய்ப்பு தரவில்லை என்கிற காரணத்தினால் என் மீது இதுபோன்ற ஒரு அவதூறு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார் என்று அந்த விசாரணையில் கூறியுள்ளார் விஜயபாபு.

வியாழன் வரை விஜய்பாபுவை கைது செய்ய தடை விதித்து ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் இதுவரை போலீசார் அவரை கைது செய்யவில்லை. அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.