மனநலம் சரியில்லாத சகோதரனை கொலை செய்த சகோதரி குடும்பம் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

சோழவரம் அருகே சொத்துக்காக மனநலம் சரியில்லாத சகோதரனை, அவரது சகோதரியும், சகோதரி கணவரும் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (41) திருமணமாகாதவர். சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக தொழில் செய்து வந்த பூபாலன், கடந்த சில மாதங்களாக மனநலம் குன்றி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கும் அருகில் வசித்து வரும் இவரது மூத்த சகோதரியான தனலட்சுமிக்கும் இடையே அவ்வப்போது சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குடிசை வீட்டின் அருகே சுமார் 4 சென்ட் இடத்திற்காக அவ்வப்போது இருவருக்கும் தகராறு நடந்து வந்துள்ளது. அண்மையில் தனது சகோதரியின் கணவர் ரவியை அரிவாளால் வெட்டியதற்காக, பூபாலன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் பலத்த காயங்களுடன் பூபாலன் இறந்து கிடந்தது குறித்து, கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
image
மேலும் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சகோதரி தனலட்சுமி குடும்பத்தினர், நேற்று பூபாலனை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பூபாலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டியுள்ளது தனலட்சுமி குடும்பம். இதனால் காயமடைந்து உரிய சிகிச்சை, குடிநீர், உணவு ஏதும் கிடைக்காமல் பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.
image
இதனையடுத்து பூபாலனை அடித்துக் கொன்ற மூத்த சகோதரி தனலட்சுமி, அவரது கணவர் ரவி ஆகிய இருவரையும் சோழவரம் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்னை மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொத்துக்காக சொந்த சகோதரனையே குடும்பத்துடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.