ரெய்டு பயத்தால் வாய் திறப்பதில்லை அதிமுக- பாரதிய ஜனதா மீண்டும் தாக்கு

ராசிபுரம்:

அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடந்த சில தினங்களாக திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ள பா.ஜனதா முயற்சி செய்வதாக அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி வார்த்தை போர் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஊழல்பற்றி பேச அ.தி.மு.க. பயப்படுவதாக மீண்டும் பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே எந்த பிரச்சினையும் கிடையாது. தொடர்ந்து நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியது ஏற்புடையது இல்லை.

எங்களுடைய தலைவர் அண்ணாமலை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் மொழிக் கொள்கையில் தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என அண்ணாமலையால் துணிச்சலாக சொல்ல முடிந்தது. தமிழர்களுடைய மொழி உணர்வுக்கு பங்கம் வராமல் பா.ஜ.க. இருக்கிறது என்று சொன்ன அந்த அண்ணாமலையை பார்த்து மொழிக்கொள்கையில் இரட்டை நிலைபாடு, தமிழக மக்களுக்கு பா.ஜ.க. ஒன்னுமே செய்யவில்லை என பொன்னையன் பேசுவது மிகவும் தவறு.

இவ்வாறு பேசியதற்கு அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் அ.தி.மு.க உரிய விளக்கம் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 4 பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களும், மின்சாரத்துறை, கல்வித்துறையில் நடக்கும் ஊழல் குறித்து சட்டமன்றத்தில் பேசி வருகிறோம்.

அண்ணாமலையும் இது குறித்து மக்கள் மன்றத்தில் பேசி வருகிறார். ஆனால், ஊழல் குறித்து அ.தி.மு.க அமைச்சர்கள் சட்டமன்றத்தில் பேசியது உண்டா? அ.தி.மு.க உறுப்பினர்களைவிட பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். நாங்கள் யாருடைய தயவு தாட்சண்யத்திலும் வளர வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எங்களுடைய நடத்தையால், செய்கையால் நாங்கள் வளர்கிறோம்.

ரெயில்வே திட்டம், பறக்கும் சாலை திட்டம் என நிறைய திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார். அ.தி.மு.க. சட்டமன்றத்தில் 65 எம்.எல்.ஏ.க்களை வைத்து தமிழகத்தில் என்ன செய்தீர்கள்? ஊழலை பற்றி பேசினதாக ஒரு உதாரணத்தை சொல்ல முடியுமா?. ரெய்டுக்கு பயந்து நீங்கள் பேசவில்லை. ஆகவே எங்கள் தலைவரையோ, கட்சியையோ குறை சொல்வதற்கு பொன்னையனுக்கு தார்மீக உரிமை கிடையாது.

8 ஆண்டு காலம் ஆட்சி முடிந்து 9-ம் ஆண்டு காலடி எடுத்து வைத்துள்ளார் பாரத பிரதமர் மோடி. இந்தியாவுக்கு அவர் செய்த சாதனைகள் குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மக்கள் எந்த அளவுக்கு பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியது எனது கடமை.

இந்தியா வலுவானதாக இருக்க வேண்டும் என பிரதமர் திட்டங்களை தீட்டி வருகிறார்.

அந்த வகையில் பிரதமர் மோடியின் மக்கள் நல் திட்டங்களில் ஒன்று விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு விவசாய குடும்பங்களுக்கு உதவிகள் செய்கிறார். இந்த பணம் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இடைத்தரகர் இல்லாமல் 3 தவணைகளாக பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது சிறப்புஅம்சமாகும்.

தமிழ்நாட்டில் 48 லட்சத்து 2 ஆயிரம் பேர் பலன் பெறுகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 860 விவசாய குடும்பங்கள் 6 ஆயிரம் ரூபாய் நிதியை பெறுகிறார்கள்.

இதை விட நீர்பாசன வேளாண் திட்டத்தின்படி மோடியின் அரசாங்கம் குளம், குட்டை, தடுப்பணை மூலமாக நீரை வீணாக்காமல் பாதுகாக்கிறது. சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றவில்லை.

தமிழர்களுடைய பிரச்சினைகளான காவிரி, முல்லை பெரியாறு, மேகதாது பிரச்சினையில் அண்ணாமலை ஒரு பார்வையாளராக இருந்து பார்த்துக் கொள்ள மாட்டார். ஆகவே தான் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் கூட மத்திய அரசாங்கம் அவரை பிரதிநிதியாக நியமித்தது.

கடைசியாக ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்கிறேன். 1974-ல் தாரை வார்க்கப்பட்ட கட்சதீவை மீட்பதற்கு தலைவர் அண்ணாமலை எல்லாவிதமான நடவடிக்கைகளை எடுக்கிறார். அதற்கு உறுதுணையாக மத்திய அரசு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.