அடிக்கும் வெயிலுக்கு இதமான வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெசிபி!

மோரில் வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும்.

அதேபோல, வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது.

இப்படி ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வெண்டைக்காய் மற்றும் மோரில் சுவையான வெண்டைக்காய் மோர்க் குழம்பு எப்படி செய்வது என்பதை பாருங்கள்

தேவையான பொருட்கள்

தயிர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

வெண்டைக்காய் – 3

அரைக்க

தேங்காய் – கால் கப்

மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

இஞ்சி – 1/2 துண்டு

பூண்டு – 3

காய்ந்த மிளகாய் – 4

பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

தாளிக்க

கடுகு – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கருவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 1

செய்முறை

வெண்டைக்காயை நன்கு கழுவி, உலர்த்தி மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், எண்ணெய் சேர்த்து, வெண்டைக்காய் வதக்கவும். லேசாக உப்பு போட்டுக் கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

தயிரில், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். அதில் ஏற்கெனவே அரைத்த விழுது சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும். பிறகு, அதோடு வதக்கிய வெண்டைக்காயையும் போட்டு ஒரு முறை பிரட்டி எடுக்கவும்.

இப்போது, அதை தயிரில் சேர்த்து கலந்து விடுங்கள்.

பின் அதை அப்படியே அடுப்பில் வைத்து கொதிக்க நுரை கிளம்பும்போது அடுப்பை அணைக்கவும். சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.