தனுஷ்கோடி கடற்கரையில் தூய்மைப் பணிகள்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த கடல் பசு மணல் சிற்பம்

ராமேசுவரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடியில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் அழிந்து வரும் அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல்பசுவை காக்கும் வகையில் வரையப்பட்டிருந்த மணல் சிற்பம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்து கலந்து கொண்டார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் நெகுழியை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், மீண்டும் மஞ்சப்பை போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

மேலும் தனுஷ்கோடி கடற்கரையில் உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு அழிந்து வரும் அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல்பசுவை காக்கும் வகையில் மணல் சிற்பம் வரையப்பட்டிருந்தது. இந்த மணல் ஓவியத்தை இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக் கழக மாணவர்களால் இணைந்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த மணல் சிற்பத்தை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில் வன உயிரினகாப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வருவாய் கோட்டாச்சியர் ஷேக்மன்சூர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.