வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் கொண்டு வந்ததெல்லாம் சரிதான், ஆனால் இதையும் கவனிங்க முதல்வரே?

களை எடுத்தால்தான் விவசாயம் சிறக்கும்; அதேபோல் அந்தத் துறையில் உள்ள சில அதிகாரிகளையும் அடையாளம் கண்டு களை எடுத்தால்தான் இந்தத் துறையும் சிறக்கும் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வசதியாகத் திருப்ப, ஒன்றிய அரசு புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் கொண்டுவந்து அதிர்ச்சியைக் கொடுத்தது.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் முதல்வருடன் வேளாண் துறை அமைச்சர்

உச்ச நீதிமன்றமும் விவாதமே இல்லாமல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் நீதிமன்றம் அதை எப்படி பயன் படுத்துவது என ஒன்றிய அரசுக்கு குட்டு வைத்தது. அதோடு ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக அணிதிரண்ட விவசாயிகள் ரோட்டுக்கு வந்து போராடினர். நூற்றுக்கணக்கில் உயிர்பலி, வன்முறை தாக்குதல் எனப் பலவற்றையும் கொரோனா காலத்தில் எதிர்கொண்ட விசாயிகள் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இதனால் ஒன்றிய அரசு அந்த சட்டங்களை விவாதமே இல்லாமல் திரும்பப் பெற்றது.

இந்த இக்கட்டான நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான முதல்படிதான் விவசாயத் துறைக்கான தனி பட்ஜெட்.

தமிழ்நாட்டில் பெரும் பகுதி மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் இருக்கும் நிலையில், தமிழக அரசின் இந்தத் தனி பட்ஜெட் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. குறிப்பாக, தற்போது நாடு முழுவதும் உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் நிலையில், விவசாயத் துறைக்கான தனி பட்ஜெட் முக்கியமானதாக விளங்குகிறது.

உணவு தானியம்

கடந்த நிதியாண்டில், உணவு தானிய உற்பத்தி 118 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 9% அதிகமாகும். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயற்கைப் பேரழிவுகளால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 3.4 லட்சம் விவசாயிகள் மீண்டும் சாகுபடியை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக 155 கோடி ரூபாயை இழப்பீடாக மானியத்தை தமிழக விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கியுள்ளது.

ஏப்ரல் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக, விவசாயத் துறைக்கான அரசின் வரைவுதிட்டத்தைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெளியிட்டார். 10 ஆண்டுகளில் இத்துறையில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான லட்சியமாக மூன்று முனை அணுகுமுறை இதில் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டுவருவது, தற்போதுள்ள நிகர அறுவடைப் பகுதியை 60% லிருந்து 75% ஆக அதிகரிப்பது, இரட்டைப் பயிர் பரப்பு 10 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது, இதன்மூலம் உணவு தானிய உற்பத்தியில் தமிழகத்தை நாட்டிலேயே முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று, பல திட்டத்தை முன்வைக்கப்பட்டதை மறக்க முடியாது.

வேளாண்மை துறை அமைச்சர், செயலர், முதல்வர்

ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற உடன், `கலைஞரின் அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நீர் ஆதாரங்கள், நுண்ணீர் பாசன அமைப்புகள் மற்றும் பிற உதவிகள் மூலம் தரிசு நிலத்தை விவசாயத்துக்கு ஏற்றதாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிய தமிழக அரசு, கடந்த ஆண்டு 1,997 கிராமங்களில் செயல்படுத்துகிறது. 2021-22ல் இத்திட்டங்கள் மூலம் மொத்த சாகுபடி பரப்பு 6.3 லட்சம் ஏக்கர் அதிகரித்து மொத்த சாகுபடி நிலத்தின் அளவு 116. 6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. குறுவை பருவத்தில் (குறுகிய கால நெல்) கடந்த ஆண்டு 3.2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1.7 லட்சம் ஏக்கர் கூடுதலாகச் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதோடு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 7.5 லட்சம் ஏக்கர் உலர் நிலங்கள் உருவாக்கப்பட்டு, நிலையான பசுமை அட்டைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிகம் லாபம் தரும் 73 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில், இளம் தலைமுறையினரை அதிக அளவில் விவசாயத் துறைக்கு அழைத்து, பல பிரிவுகளில் அரசு பயிற்சி அளிப்பது மட்டும் அல்லாமல், பல்வேறு விவசாயப் பொருள்களுக்கு அதிக ஆளவிலான மானியமும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே இருந்தாலும் இப்பட்டியலில் புதிதாகப் பல பொருகள் விவசாய பட்ஜெட் அறிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளது. இது போன்று விவசாயத்துக்கு எனத் தனி கவனம் செலுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடக்கமாக மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்தது. தஞ்சைப் பகுதியில் தூர்வாரும் பணியை பார்வையிட்டது என அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இது இனியும் தொடரும் என்கின்றனர் அதிகாரிகள்.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்த முதல்வர்

முதல்வரின் இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கடந்த ஒருவார காலமாக வேளாண் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு என ஒதுக்கப்பட்ட யூரியாவை தனியாருக்கு கொடுத்து, 300 ரூபாய் மதிப்புள்ள யூரியாவை 750 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதோடு யூரியாவுடன் குருணை மருந்து என்பதை 600 ரூபாய் விலைக்கு கட்டாயம் வாங்க வேண்டும் களிமண் கலந்து தயாரிக்கப்பட்ட இதை வாங்கினால்தான் யூரியாவை கொடுப்போம் என விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கத்தான் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யூரியா

முதல்வர் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்க முயன்றாலும் இது போன்ற சில அதிகாரிகளின் நடவடிக்கை அதைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது என்கின்றனர். முதல்வர் கவனத்துக்கு இந்த பிரச்னை சென்றதா எனத் தெரியவில்லை. டெல்லியிலேயே போராட்டம் நடத்தி ஒன்றிய அரசின் கவனத்தைத் திருப்பிய தமிழக விவசாயிகள் திருவண்ணா மலையில் களம் அமைத்துள்ளனர். விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் கொண்டு வந்தது சாதனை என்றாலும், அதிகாரிகளை தங்கள் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நல்லது செய்து ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கித் தர வேண்டுமே ஒழிய கெட்டப்பெயர் வாங்கி தந்துவிடக் கூடாது. அரசும் அதிகாரிகளைக் கண்காணித்து தங்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.