ஆம்புலன்ஸ்க்கு வசதியில்லை; 4 வயது மகளின் உடலை 5 கி.மீ தூக்கிச் சென்ற தந்தை -மனதைக் கணமாக்கும் வீடியோ

மத்தியப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ்க்கு கொடுக்க காசு இல்லாததால், இறந்துபோன தன்னுடைய 4 வயது மகளின் உடலை தந்தை ஒருவர் தோளில் சுமந்தபடியே சாலையில் நடந்துசெல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த திங்களன்று தங்களின் 4 வயது மகளின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பக்ஸ்வாஹா சுகாதார மையத்துக்கு முதலில் கொண்டுசென்றுள்ளனர். பின்னர் சிறுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து பெற்றோர், டாமோவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக சிறுமி மருத்துவமனையில் அன்றைய தினமே இறந்துவிட்டார். அதன் பின்னர், சிறுமியின் உடலை ஊருக்கு கொண்டுசெல்ல, மருத்துவமனை ஊழியர்களிடம் ஆம்புலன்ஸ் கேட்டதாகவும், அவர்களிடமிருந்து சரியான பதில் ஏதும் வராததால், சிறுமியின் உடலை அப்படியே கொண்டுசெல்ல நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

மகளின் உடலைத் தோளில் சுமந்து செல்லும் தந்தை

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய இறந்த சிறுமியின் உறவினர்கள், “தனியார் வாகனம் ஏற்பாடு செய்யுமளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. அதனால், உடலை எங்கள் கிராமத்துக்கு கொண்டுசெல்ல வாகனம் ஏற்பாடு செய்து தருமாறு நகர் பஞ்சாயத்திடம் கேட்டோம். ஆனால், அவர்கள் அதை மறுத்துவிட்டனர். அதையடுத்து, சிறுமியின் உடலைப் போர்வையில் போர்த்தி ஊருக்கு கொண்டுசெல்ல முடிவு செய்து பக்ஸ்வாஹாவுக்கு பஸ்ஸில் ஏறிவிட்டோம். பின்னர் பக்ஸ்வாஹா சென்றடைந்ததும் அங்கிருந்து பவுடி கிராமத்துக்கு வாகனத்தில் செல்ல வசதி இல்லாததால், சிறுமியின் தந்தை அவர் உடலைத் தோளில் சுமந்தபடியே 5 கிலோமீட்டர் சாலையில் நடந்து சென்றார்” என்று கூறினார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், டாமோ மாவட்ட மருத்துவமனை நிர்வாகம், “இது குறித்து யாருமே எங்களிடம் வரவில்லை. எங்களிடம் கார்கள் இருக்கின்றன. அப்படியில்லையென்றால், செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஏதாவதொரு தொண்டுநிறுவனத்தின் மூலம் வாகனத்தை ஏற்பாடு செய்திருப்போம்” என விளக்கமளித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.