நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் – வன்முறை…!

டெல்லி: நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி டெல்லி ஜமா மசூதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதில் சில இடங்களில் போராட்டம் வன்முறைக்களமாக மாறியது. காவல்துறையினர்மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து, இன்று நாடு முழுவதும் போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி ஜமா மசூதி முன் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நூபுர் ஷர்மாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்  நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. வாகனங்கள் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டதுடன் கல் வீச்சும் இடம்பெற்றன. காயங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதுகுறித்து கூறிய  ராஞ்சி டி.ஐ.ஜி., அனிஷ் குப்தா கூறுகையில், “நிலைமை கொஞ்சம் பதட்டமாக உள்ளது, ஆனால் கட்டுக்குள் உள்ளது. நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர். நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். கூட்டம் இங்கிருந்து கலைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 

மேற்குவங்கம் மாநிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும், சில இடங்களில் வன்முறை தலைதூக்கியது. நுபுர்சர்மா மற்றும் வெளியேற்றப் பட்ட பாஜக தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹவுராவில் பெரும் கூட்டம் நடைபெற்றது. கலபுர்கியில் உள்ள முஸ்லிம் சௌக்கில் ராசா அகாடமி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில்  இஸ்லாமிய பெண்கள்  நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். அதுபோல  சோலாப்பூரில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலும் போராட்டம் நடைபெற்றது. லூதியானா ஜமா மசூதியின் போராட்ட அழைப்பிற்குப் பிறகு, பஞ்சாப் முழுவதும் நபிகளை அவமதித்தவர்களைக் கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதுபோல கர்நாடக உள்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.