ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா,

18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 3-வது கட்ட தகுதி சுற்று போட்டி கொல்கத்தா, குவைத், கோலாலம்பூர் உள்பட 6 இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகளும், 2-வது இடம் பெறும் 5 சிறந்த அணிகளும் ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி அடையும்.

‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 106-வது இடத்தில் இருக்கும் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி, 150-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

தொடக்க லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கம்போடியாவை தோற்கடித்த உற்சாகத்துடன் இந்திய அணி களம் காணுகிறது. அந்த ஆட்டத்தில் சுனில் சேத்ரி 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கினார். ஆப்கானிஸ்தான் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கிடம் வீழ்ந்தது. எனவே அந்த அணிக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாகும். தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் அந்த அணி கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் இந்தியா 6 ஆட்டத்திலும், ஆப்கானிஸ்தான் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 3 ஆட்டங்கள் ‘டிரா’வில் முடிந்தன. 2016-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.