இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.50 கோடியில் வளர்ச்சிப்பணிகள் – அதிகாரிகள் குழு ஆய்வு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் குறுக்கே உள்ள ஆற்றைக் கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

கடந்த மாதம் மாரியம்மன் கோயில் காணிக்கையாக வந்திருந்த தங்கம் மற்றும் பொருள்களை சேமிப்புப் பெட்டகமாக மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோயிலைச்சுற்றிப் பார்த்து பின்பு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

அதன்படி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அனைக்கட்டு பகுதியிலிருந்து பேருந்து கோயிலுக்கு வந்து செல்ல மேம்பாலம், கோயிலைப் பாதுகாக்க சுற்றுச்சுவர், வணிக வளாகங்கள், பக்தர்கள் பசியாற அன்னதானக் கூடம், மருத்துவ மையம், சுகாதார வளாகம், ஒய்வு அறை மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

இந்தப் பணிகளை மேற்கொள்ள இடம் தேர்வு செய்வதற்காகத் தமிழகப் பொதுப்பணித் துறை தலைமைப்பொறியாளர் மலர்விழி, துணை பொறியாளர் அமுதா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் நிர்வாக அறங்காவலர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆய்வில் கலந்து கொண்டனர். வளர்ச்சித் திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து ஓய்வெடுக்க வசதிகள் அமைத்துத் தரப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.