யூரியா உரம் கொள்வனவுக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

இலங்கை அரசாங்கத்தின் அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில்,  யூரியா உரத்தினை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் இக்கடனுதவி குறித்த உடன்படிக்கை ஒன்று மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்றைய தினம்  (10 ஜூன் 2022) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை மற்றும் இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

2.    இலங்கை அரசாங்கம் “யால” பருவகால நெற்செய்கைக்குரிய யூரியா உரத்தினை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை இந்த கடனுதவி திட்டம் வழங்குகின்றது. முக்கியத்துவம் வாய்ந்த இத்தேவையினை அடிப்படையாகக் கொண்டு, உரக்கொள்வனவுக்கான சகல செயற்பாடுகளையும் துரிதமாக நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கமும் எக்ஸிம் வங்கியும் இணங்கியுள்ளமையால் இந்த உரத்தொகுதி விரைவில் இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வின்போது கருத்துத்தெரிவித்த பிரதமர், தக்க தருணத்தில் உதவியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றியினைக் கூறியிருந்தார். இதேவேளை இக்கடனுதவி குறித்த சகல செயற்பாடுகளையும் மிகவும் துரிதமாக நிறைவேற்றியமையானது, இலங்கை மக்களின் நலன்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தினை பிரதிபலிப்பதாக  உயர் ஸ்தானிகர் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.

3.    அயலுறவுக்கு முதலிடம் என்ற கொள்கையின் அடிப்படையிலும் இலங்கையின் சிறந்த நண்பனாகவும் பங்காளியாகவும், இந்தியா கடந்த சில மாதங்களில் இலங்கை மக்களுக்கு பல்வேறு பரிமாணங்களில் உதவிகளை வழங்கியுள்ளது. 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவி முதல் உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் மண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் சக்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு உதவிகளை வழங்குதல் வரையில் இந்த ஆதரவானது நீடித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

10 ஜூன் 2022  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.