வைகை கரையில் வடிகாலின்றி கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவர்: மழைக் காலத்தில் மிதக்கும் மதுரை சாலைகள்

மதுரை: மதுரை நகர் பகுதியில் ஓடும் வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளது. வடிகாலின்றி கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரால் மழைநீர் வழிந்தோட முடியாமல் நகர் பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் சாலைகள் தண்ணீரில் மிதக்கும் அவலம் ஏற்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான வருஷ நாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு, 240 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலந்து, பின் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. வைகை ஆற்றுப் பகுதியில் மதுரை மக்களின் தாகம் தீர்க்க பல நூறு கிணறுகள் அரசால் தோண்டப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பல கிராமங்களுக்கு தண்ணீர் குழாய் மூலம் எடுக்கப்படுகிறது.

வைகை அணை மூலமும் மதுரை மாநகராட்சியில் வசிக்கும் மக்கள் குடிநீர் பெறுகின்றனர். விவசாயமும் இரு போகம் நடக்கிறது. அதனால், வைகை ஆறு ஓடும் மாவட்ட மக்கள், இந்த ஆற்றை ஒரு புன்னிய நதியாக வழிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட படித்துறைகளில் குளிப்பது, வீடுகளில் நடக்கும் விஷேசங்கள், ஊர் கோயில் திருவிழாக்களுக்கு இந்த ஆற்றின் தண்ணீரை எடுத்து சென்றுதான் நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

அதுபோல், சித்திரைத் திருவிழாவில் மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலிப்பதை லட்சக்கணக்கான பக்தர்கள், ஆற்றங்கரையின் இரு புறமும் திரண்டு தரிசிப்பார்கள்.

கடந்த காலத்தில் விழாக்கள் கொண்டாடுவதற்கும், நகர் பகுதியில் பெய்யும் மழை தண்ணீரும் வைகை ஆறு அதன் கரைகளில் இரு புறமும் திறந்த நிலையில் இருந்தது. ஆனால், தற்போது மதுரை நகரில் ஓடும் வைகை ஆற்றின் இருபுறமும் மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளனர். மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆற்றின் வட மற்றும் தென் கரைகளில் மொத்தம் 3 கி.மீ., தொலைவிற்கு காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை தனியாக நிதி ஒதுக்கீடும் அத்துறையும் மீதமுள்ள இடத்தில் வைகை ஆற்றில் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளனர். இந்த காம்பவுண்ட் சுவர், குறைந்தப்பட்சம் 6.5 முதல் 7 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அதனால், மக்கள் முன்போல் ஆற்றங்கரையில் இறங்கி நீராட முடியவில்லை. வீட்டு விஷேசங்கள், திருவிழாக்களுக்கு தண்ணீரை எடுத்து செல்ல முடியவில்லை. ஆற்றின் இரு புறமும் பிரமாண்ட காம்பவுண்ட் சுவர் கட்டியிருப்பதால் தற்போது மதுரை நகர் பகுதியில் பெய்யும் மழை தண்ணீர் ஆற்றில் வராமல் சாலைகளில் தெப்பம்போல் தேங்கிவிடுகிறது. அதனால், மழை பெய்யும்போதெல்லாம் நகர்புற சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கிறது. வாகனப் போக்குவரத்து ஸதம்பிக்கிறது.

காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு முன் இயல்பாக நகர் பகுதியில் பெய்த மழைநீர் வழிந்தோடி ஆற்றில் சென்றடைந்தது. ஆற்றை அதன் போக்கிலே விட்டால்தான் உயிரோட்டமாகவும், பல்லுயிர் வளமும் பெருகும். ஆனாலும், வைகை ஆறு குறுக்கே வழிநெடுக தடுப்பணைகள் கட்டி கடை மடை வரை தண்ணீர் உருண்டோட வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது. தற்போது ஆற்றின் இரு புறமும் காம்பவுண்ட் சுவரும் கட்டியதால் வைகையை புன்னிய நதியாக போற்றி வரும் மதுரை மக்கள், ஆற்றை தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்த முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

நகர் பகுதியில் பெய்யும் மழைநீர் வழிந்தோடுவதற்கு மழைநீர் கால்வாய்களை ஏற்படுத்தி ஆற்றின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் காலோன் கூறும்போது, “வைகை ஆற்றங்கரையில் சாலை போடப்பட்டிருப்பதால் பாதுகாப்பிற்காக தடுப்பு சுவர் கட்டியிருக்கலாம். மழைநீர் தடையின்றி செல்வதற்கு அந்த தடுப்பு சுவரில் வழி ஏற்படுத்தப்பட்டிருக்கும். அப்படி இல்லையென்றால் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நேரில் ஆய்வு செய்து மழைநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்படும். தவறாக சுவர் கட்டியிருந்தால் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

ஆற்றங்கரையில் சாலை அமையும் இதுபோல் தடுப்பு சுவர் இதுபோல் சில இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை அடையாறில் கூட இதுபோல் ஆற்றங்கரையோரம் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.