3 கொரோனா அலைகளை சந்தித்தபோதும் இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது – அமெரிக்க நிதி அமைச்சகம்

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்தன. குறிப்பாக, இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விளைவுகளால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது.

ஆனால், கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகளை கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்த வகையில், கொரோனா தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்திருந்த இந்திய பொருளாதாரம் தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நிதித்துறை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், கொரோனாவுக்கு பின் நாட்டின் பொருளாதார சீரமைப்பு மற்றும் பிற நாடுகளின் பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில், 3 கொரோனா அலைகளை சந்தித்த போதும் இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலை நோக்கி சென்றது. 2021-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவிதமாக உயர்ந்தது.

2021-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. இது, பின்னடைவில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது. 2022-ம் ஆண்டு தொடங்கியது முதல் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையான ஒமைக்ரான் பரவத்தொடங்கியது. ஆனால், ஒமைக்ரானால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. அதேபோல், ஒமைக்ரான் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தைவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.