ஆர்எஸ்எஸ் நினைவிடத்தை நோட்டமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி காஷ்மீர் போலீசில் ஒப்படைப்பு

நாக்பூர்: நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் நினைவகத்தை நோட்டம் விட்ட வழக்கில்  கைது செய்யப்பட்ட தீவிரவாதி, ஜம்மு காஷ்மீர் போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டான். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம்,  ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் நினைவிடமும் இங்கு உள்ளது. கடந்தாண்டு ராயீஸ் அகமது ஷேக் அப்துல்லா ஷேக்(26) என்பவன் இந்த  நினைவிடத்தை நோட்டம் விட்டு செல்போனில் படமும் எடுத்தான். காஷ்மீரின்  அவந்திபோரா நகரை சேர்ந்த ஷேக்,  ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை  சேர்ந்தவன். பாகிஸ்தானில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி தீவிரவாத  நடவடிக்கைகளை மேற்கொள்வான். இந்நிலையில, நாக்பூரில் உள்ள  ஹெட்கேவாரின் நினைவிடத்துக்கு சென்று அதனை படம்பிடித்து அனுப்புமாறு  பாகிஸ்தானில் இருந்து இவனுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூலை 13ம் தேதி விமானத்தில் நாக்பூர் வந்த ஷேக்,  சீத்தாபுல்டியில் இருக்கும் ஓட்டலில் தங்கினான். மறுநாள்  ஹெட்கேவார் நினைவிடம் சென்று செல்போனில்  பேசுவது போல் நினைவிடத்தை  படம்பிடித்து பாகிஸ்தானுக்கு  அனுப்பினான். ஆனால், அது தெளிவாக இல்லை என்று கூறி பாகிஸ்தானில்  இருந்து தொடர்பு கொண்டவர் ஷேக்கை திட்டினார். மேலும், புதிய படத்தை எடுத்து  அனுப்புமாறு உத்தரவிட்டார். ஆனால், போலீசுக்கு பயந்த ஷேக் புதிதாக படம்  எடுக்காமல் மறுநாள் ஸ்ரீநகர் சென்றான். இந்த சம்பவம் தொடர்பாக கோட்வாலி  போலீசார் ஷேக் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டான்.  தீவிரவாத தடுப்பு  படையினர் அவனை நாக்பூர் கொண்டு  வந்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து அவன் பல  அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தான். விசாரணை முடிந்து நேற்று அவன் மீண்டும் ஜம்மு காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.