வைகாசி விசாகம்: பகை நீங்கி மன நிம்மதி பெருக அருள்வார் முருகன் – கடைப்பிடிப்பது எப்படி?

இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் குருபகவானுக்குரிய இரண்டாவது நட்சத்திரம் விசாகம். இதுவே முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமும் கூட. இந்தப் பிரபஞ்சத்தின் குருவாகத் திகழ்பவர் சிவபெருமான். அந்த சிவபெருமானுக்கே குருவாக விளங்கி ‘தகப்பன் சாமி’ எனத் திகழ்ந்து குருவுக்கே குருவாக விளங்கியே பேறு பெற்றவர் முருகப்பெருமான்.

முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், விசாக நட்சத்திரம் ஆகியன. இவை தவிர்த்து தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டிப் பெருவிழா ஆகியவை மிகவும் முக்கியமானவை. அவற்றுள் தனிச்சிறப்போடு திகழும் தன்மை கொண்டது வைகாசி விசாகம்.

முருகப்பெருமான்

மனமே முருகனின் மயில்வாகனம் 

பொதுவாக நம் நாட்டில் பௌர்ணமி நாள் எல்லாம் விழாகாலமாகவே திகழும். அவ்வாறு வைகாசி மாதம் வரும் பௌர்ணமி நாளே வைகாசி விசாகம் என்று கொண்டாடப்படும். முருகப்பெருமானோடு தொடர்புடைய நட்சத்திரங்கள் மூன்று. அவை: விசாகம், கார்த்திகை, உத்திரம். இவை முறையே வைகாசி, கார்த்திகை, பங்குனி ஆகிய மாதங்களில் முழுநிலவு நாளை ஒட்டியே வரும். இந்த மூன்றுமே முருகனை வழிபட உகந்த திருநாள்களாகும். முழு நிலவு என்பது சந்திரன் தன் முழு ஒளியோடு திகழும் நாள். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் மனதின் அதிபதி. மனம் முழுமையும் இருள் இன்றி பூரணமான ஒளியோடு திகழ வேண்டும் என்றால் பௌர்ணமி நாளில் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் அவனை வழிபட்டால் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்தொளி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வினைகள் தீர்க்கும் விசாகன்

முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் அந்தத் திருநாமம் வந்தது என்று சொல்வார்கள். அதேவேளை சாகன் என்றால் சஞ்சரிப்பவர் – வி என்றால் பறவை என்று பொருள். விசாகன் என்றால் பறவையின் மீதேறி சஞ்சரிப்பவன் என்று பொருள். மயில் என்னும் பறவையின் மீதேறி முருகப்பெருமான் சஞ்சரிப்பவர் என்பதே விசாகன் என்பதன் பொருள்.

முருகனை மயில்மீது ஏறிவரும் பெருமானாக வழிபடுவதன் தத்துவம் தனித்துவமானது. முருகனுக்கு இரண்டு மயில்கள். ஒன்று தேவ மயில். சூரபத்மனோடு புரிந்த யுத்தத்தில் இந்திரனே மயிலாக வந்து முருகனுக்கு வாகனமாக மாறினார். முருகனுக்கு எப்போதும் தேவர்குலத் தலைவனைத் தன் வாகனமாக மாற்றிக்கொள்ள விரும்பாத முருகப்பெருமான், அசுரனுடனான யுத்தத்தின் முடிவில் சூரபத்மனை சம்காரம் செய்யாமல் மயிலும் சேவலுமாக மாற்றினார். அந்த மயிலை அசுரமயில் என்பார்கள். அசுர குணம் என்பது அடங்காமல் இருப்பது. அடங்காத அசுரனையும் முருகன் தன் கருணையினால் அடக்கி ஆள்வார் என்பதுதான் அசுரமயிலின் தத்துவம்.

முருகப்பெருமானை மயில் மீது ஏறி வரும் பெருமானாகக் கண்டு வழிபட்டால் அந்த விசாகன் விரைந்து வந்து நம் வினைகள் தீர்ப்பான் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான் ஏற விரும்பும் மயில் நம் மனமே என்று சொல்வாரும் உண்டு.

‘ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே’ என்று அருணகிரிநாதர் பாடுகிறார். இதன்பொருள் ஏறத்தக்க மயிலின் மீது ஏறி விளையாடல்கள் புரியும் முகம் என்று பொருள். மனமே முருகனின் மயில் வாகனம் என்று ஒரு பாடல் உண்டு. யாரெல்லாம் தம் மனத்தை முருகனுக்கான வாகனமாக மாற்றி சதா சர்வகாலமும் அவனைச் சுமந்து திரிகிறார்களோ அவர்களின் மனதில் எல்லாம் ஏறி (எழுந்தருளி) திருவிளையாடல்கள் புரிபவன் முருகப்பெருமான் என்பதுவே அடியார்களின் வாக்கு.

அப்படிப்பட்ட முருகனுக்கு மனதில் இடம் தந்து வழிபாடுகள் செய்ய வேண்டிய நாள் வைகாசி விசாகம்.

வைகாசி விசாகம் வழிபடுவது எப்படி?

இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (12.6.2022) கொண்டாடப்படுறது. முருகப்பெருமான் ஆலயங்களில் கடந்த பத்து நாள்களாக உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் முருகப்பெருமானை வழிபடுவார்கள். இந்த நாளில் ஆலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபடலாம்.

இன்று நீராடி திருநீறு அணிந்து முருகப்பெருமானைத் துதிக்க வேண்டும். முருகனுக்கு செவ்வரளி, செம்பருத்தி முதலிய செந்நிற மலர்களை சாத்தி வழிபடுவது விசேஷம். சிலர் நாள் முழுவதும் உண்ணா நோன்பும் மேற்கொண்டும் வழிபடுவார்கள். முருகப்பெருமானுக்குரிய திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல் பாராயணம் போன்ற தோத்திரங்களை நாள் முழுவதும் சொல்லி வழிபட வேண்டும்.

முருகப்பெருமான்

ஆறுமுகப்பெருமானைப் போற்றும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவதும் நற்பலன்களைத் தரும்.

விஸாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்!

ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்!

இதன் கருத்து விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும், கிருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரனது குமாரருமான ஸ்ரீகந்தனை வணங்குகிறேன் என்பதாகும்.

பொதுவாக வைகாசி விசாக தினத்தன்று வழிபாடுகள் செய்தால் செய்தால் பகை நீங்கும். பாவங்கள் விலகும். முன்வினைப் பயன்கள் நீங்கும். திருமண வரம் கைகூடும். வேண்டும் வரம் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. எனவே அனைவரும் தவறாமல் இன்று முருகப்பெருமானை வழிபட்டு சகல வரங்களையும் பெறுவோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.