உ.பி. முதல்-மந்திரி தலைமை நீதிபதியாகிவிட்டாரா? – ஓவைசி கேள்வி

புதுடெல்லி,

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய மஜ்லிஸ்(ஏ ஐ எம் ஐ எம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார்.

நுபுர் சர்மாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென வன்முறை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸ் கைது செய்தது.

இதனையடுத்து, மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, பிரயாக்ராஜில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணமாக முக்கிய நபரான ஜாவேத் முகமதுவின் வீட்டை பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணையம், போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது.

அவர் வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெறவில்லை என்றும் அதன் காரணமாகவே அந்த வீட்டை இடித்ததாகவும் பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய அசாதுதீன் ஒவைசி, “உத்தரபிரதேச முதல் மந்திரி அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகிவிட்டாரா? அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி என அறிவிக்க முடியும். அவர்களின் வீடுகளையும் இடித்துத் தள்ள உத்தரவிட முடியும். இப்படி தலைமை நீதிபதி போல் அவர் செயல்பட்டது கண்டனத்துக்குரியது” என்று கடுமையாக விமர்சித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.