ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா… அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது?!

முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது.

போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தின்போது வாகனங்களுக்குத் தீவைப்பு நடந்தது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக் கருதப்படும் அஃப்ரீன் பாத்திமாவின் தந்தை ஜாவேத் மொகமது-வின் வீடு இடிக்கப்பட்டுள்ளது.

அஃப்ரீன் ஃபாத்திமா

இது தொடர்பாக பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தின் (பிடிஏ) மூத்த அதிகாரி ஒருவர், “இந்த வீடு பி.டி.ஏ மூலம் வரைபடத்தைப் பெறாமல் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மே 10-ம் தேதி ஜாவேத் மொகம்மது-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரின் கருத்தைத் தெரிவிக்கும்படி கூறப்பட்டது. அவருக்கான கால அவகாசம் மே 24 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கூறப்பட்ட தேதியில், ஜாவேத் அல்லது அவரின் வழக்கறிஞர் என யாரும் வரவில்லை. இது தொடர்பாக எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை, எனவே மே 25 – தேதி வீட்டை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” எனக் கூறினார்.

ஆனால், ஜாவேத் முகமது-வின் மனைவி, “வீடு தொடர்பான ஆவணம் கேட்டு ஜூன் 10-ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் காவல்துறை வீட்டிலேயே தான் இருந்தார்கள். ஜூன் 11-ம் தேதி சனிக்கிழமை இரவு வீடு இடிக்கப்படும் என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வார இறுதி நாள் எங்களால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை. இதன் மூலம் திட்டமிட்டு அவசரமாகத்தான் எங்கள் வீடு இடிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். ஜாவேத்-வின் மகன் உமாம், “அவர்கள் அனுப்பியதாகக் கூறும் எந்த அறிவிப்பும் உண்மையான சொத்து உரிமையாளரின் பெயரில் வெளியிடப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மாணவர் ஆர்வலர் அஃப்ரீன் ஃபாத்திமா, என்னையும், எனது பெற்றோர் மற்றும் சகோதரியும் அநியாயமாகக் கடத்தப்பட்டு காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களில் #StandWithAfreenFatima என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா?

அஃப்ரீன் ஃபாத்திமாடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவி மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர். 2019-2020-ல் டெல்லியின் ஷாஹீன் பாக்கில் CAA/NRC எதிர்ப்பு போராட்டங்களின் போது அஃப்ரீன் ஃபாத்திமாதீவிரமாக இருந்தவர். அவர் ஹிஜாப் மீதான தடைகளுக்கு எதிராக 300 இஸ்லாமிய பெண்களுடன் போராட்டம் நடத்தினார்.

கடந்த அக்டோபரில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற தனது தங்கை சுமையா ஃபாத்திமாவுடன் இணைந்து ‘முஸ்லிமா அலகாபாத்’ என்ற ஆய்வு வட்டத்தை உருவாக்கினார். இந்த ஆய்வு வட்டத்தில் தற்போது 70 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகளை நடத்தியுள்ளனர். அதில் ஹிஜாப் தடை மற்றும் அரச அடக்குமுறை மற்றும் நம்பிக்கைகள், அரசியல் மற்றும் அடையாளம் பற்றிய உரையாடல்கள் குறிப்பிடதக்கவை.

இந்த நிலையில், அஃப்ரீன் ஃபாத்திமாவுக்கு சமூகவலைத்தளங்களில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான குர்மெஹர் கவுர், அஃப்ரீன் ஃபாத்திமாவின் வீடு இடிக்கப்பட்டது “தனது சொந்தக் குடிமகன் மீது அரசு நடத்தும் தாக்குதல்” என்று கூறினார். செயற்பாட்டாளர் மொகமது இர்ஷாத், “அஃப்ரீன் ஃபாத்திமாஎங்களிடையே மிகவும் அழுத்தமாகக் குரல் கொடுப்பவர். அரசுக்கு எதிரான மறுப்புக் குரல்கள் அரசை வெறித்தனமாக ஆக்கியுள்ளது. நீங்கள் எவ்வளவு பேரைக் கைது செய்வீர்கள்? எத்தனை வீடுகளை இடிப்பீர்கள்? எதுநடந்தாலும் சரி, எந்த நிபந்தனையுமின்றி நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் ஃபாத்திமா கான், “அஃப்ரீன் ஃபாத்திமாவின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் அனைத்து இஸ்லாமிய ஆர்வலர்களுக்கும் ஒரு சமிக்ஞையாகும். இந்த நாட்டில் உங்கள் குரலை ஒடுக்க உங்கள் சொத்துகள் ஏதேனும் சாக்குப்போக்கினால் இடிந்து விழும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.