நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக ரகசிய வாக்குமூலத்தில் கூறிய விவரங்களை வெளியிடுவேன்: தங்கம் கடத்தல் சொப்னா எச்சரிக்கை

திருவனந்தபுரம்:   நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக நான் ரகசிய வாக்குமூலத்தில் கூறிய அனைத்து விவரங்களையும் விரைவில் வெளியிடுவேன் என்று சொப்னா கூறினார். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பினராய்  விஜயன் பதவி விலகக் கோரி கடந்த 5 நாட்களாக கேரளா முழுவதும் காங்கிரஸ், பாஜ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சொப்னா நேற்றும் மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: என் மீது எந்த காரணமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜலீல் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நான் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தில் கூறிய விவரங்களை விரைவில் வெளியிட தீர்மானித்து உள்ளேன். ஜலீல் என்னென்ன குற்றங்கள் செய்தாரோ அவை அனைத்தையும் வெளியிடுவேன். என்னிடம் சமரசம் செய்வதற்காக அவர்தான் ஆட்களை அனுப்பி வைத்தார். என் மீது இனியும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப் போகிறார்கள் என்பதை பார்த்து விடலாம். என் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனக்கு போலீசின் பாதுகாப்பு தேவையில்லை. உடனடியாக அவர்களை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பினராய்க்கு எதிராக போராட்டம் தீவிரம்முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக நேற்றும்  கேரளா முழுவதும் போராட்டம் வெடித்தது. நேற்று அவர் மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் நடந்த அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் செல்லும் வழிநெடுகிலும் காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் உள்பட கட்சியினர் கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்திற்கு வெளியேயும் போராட்டம் நடந்தது. இதனால் பினராய் விஜயனுக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கருப்பு ஆடையோ, கருப்பு முகக்கவசமோ கூட அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கெடுபிடிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.