நேஷனல் ஹெரால்டு நாளிதழை ராகுல், சோனியா காந்தி இருவருக்கும் சொந்தமான யங் இந்தியா கம்பெனியால் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகத் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராகுல், சோனியா இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சோனியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் சிறிதுகாலம் அவகாசம் கேட்டிருந்தார். மேலும் ராகுல் காந்தியும், தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, 13-ம் தேதி (இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ராகுல் காந்திக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
மத்திய பா.ஜ.க அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணையை நடத்துகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
Delhi | Congress leader Rahul Gandhi arrives at the office of the Enforcement Directorate to appear in the National Herald case https://t.co/Sq0kJwL7DA
— ANI (@ANI) June 13, 2022
இந்த நிலையில் இன்று, டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஒன்று திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால், போராட்டத்தில் ஈடுபட்டோரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.
அதையடுத்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து, அமலாக்கத்துறை அலுவலகம் வரை, கட்சித் தொண்டர்களுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் பேரணியாக நடந்து சென்றனர். பின்னர் ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தற்போது நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.